

சென்னை: பெரும்பாலான பகுதிகளில் காஸ் சிலிண்டர் விநியோகத்துக்கான காத்திருப்புக் காலம் 5 நாட்களுக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது.
விநியோக கால அளவை மேலும் குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான ஐஓசி, பிபிசி, எச்பிசி பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன.
எந்தவித பதற்றமும் தேவையில்லை.எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முதல் முனையங்கள், கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வரை முழு விநியோகச் சங்கிலியும் தடையின்றிச் செயல்படுகிறது.
மாநிலம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தடையின்றி விநியோகம் உறுதி செய்யப்படுகிறது.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (ஐஓசி, பிபிசி, எச்பிசி) தமிழகம் முழுவதும் உள்நாட்டு எல்பிஜி விநியோகத்தையும் தடையின்றி மேற்கொண்டு வருகின்றன.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் தொடர் முயற்சி, தமிழக அரசின் தீவிரக் கண்காணிப்பு ஆகியவற்றால், பெரும்பாலான பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்துக்கான காத்திருப்புக் காலம் 5 நாட்களுக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது.
விநியோகத்துக்கான கால அளவை மேலும் குறைப்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் பங்க்குகளில் ஆட்டோ எல்பிஜி போதுமான இருப்பு உள்ளது.
ஆட்டோ எல்பிஜி தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதற்காக கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.