

திருவாரூர்: விபத்துகள் இல்லாமல் பேருந்துகள் நல்ல முறையில் இயங்க, திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இன்று காலை கணபதி ஹோமம் நடத்தி பரிகார பூஜை செய்யப்பட்டது. இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகை மண்டலத்தில் செயல்படும் போக்குவரத்து பணிமனைகளின் கீழ் 543 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஒரு சில மாதங்களில் இந்த அரசு பேருந்துகள் விபத்துக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது. அதுபோல் பேருந்துகள் ஆங்காங்கே பழுதாகி நின்று விடுகின்றன. இதனை குறைப்பதற்கு நாகை மண்டலத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் கணபதி ஹோமம் நடத்தி பரிகார பூஜை செய்ய அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டை மேலாண்மை இயக்குநர் தசரதன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேளாங்கண்ணியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில் மண்டல அளவிலான அதிகாரிகளும் கலந்து கொண்டனர் அலுவலகத்திற்கு மட்டுமின்றி பேருந்துகளுக்கும் புனித நீர் தெளித்து திருஷ்டி பரிகாரம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ட்ரம்ஸ் சிவமணி கலந்து கொண்டு யாகத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் ஒரு சில நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களை உற்சாகப்படுத்தினார்.
இன்று திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கணபதி ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து யாகம் வளர்த்த சிவாச்சாரியார் அலுவலகம் மட்டுமின்றி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ஏறி புனித நீர் தெளித்து பரிகாரம் செய்தார். இந்த நிலையில், பணிக்கு வந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர். ஒரு சிலர் இந்த பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது : விபத்துக்கள் அதிகரித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். தொழில் நுட்ப பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதனை அதிகப்படுத்த வேண்டும், பழுதடையும் உதிரி பாகங்களை புதிதாக மாற்ற வேண்டும்.
இது போன்று நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதனை கண்டு கொள்ளாத அதிகாரிகள், அரசு பணத்தை செலவு செய்து யாகம் நடத்தி வருகின்றனர். இதற்கு தமிழக அரசிடம், துறை சார்ந்த அமைச்சகத்திடமிருந்து எந்தவித அனுமதியும் பெறாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தனியார் பேருந்துகள் அவ்வப்போது பராமரிப்பு பணியை மேற்கொண்டு விடுவதால் அந்தப் பேருந்துகள் தரமாக உள்ளது.
அதே நேரத்தில் அரசு பேருந்துகள் அதில் ஏற்படும் பழுதுகளை விரைவாக சரி செய்வதில்லை. மேலும் அதில் உள்ள உதிரி பாகங்கள் உடனுக்குடன் மாற்றப்படுவதில்லை. இது போன்ற காரணங்களாலேயே பேருந்துகள் பழுதடைந்து வீணாகி வருகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்து அறிந்து கொள்ளாமலும், தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல்,
யாகம் நடத்தி பரிகாரம் செய்வது வேடிக்கையாக உள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசும் போக்குவரத்து துறை அமைச்சகமும் வழங்கியுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டுமென தொழிற்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.