

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் போது அரசு அறிமுகம் செய்த புதிய மதுபான கொள்கையில் (2022) முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இந்தச் சூழலில் சிபிஐ விசாரித்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் கேஜ்ரிவால் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் என்.ஹரிஹரன் தனது வாதத்தை எடுத்து வைத்தார். வழக்கு தொடர்பான வாதங்கள் முடிந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதில் கேஜ்ரிவால், சிசோடியா மற்றும் இதில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட 21 பேரை விடுவித்தது. இந்த தீர்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.