“முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” - அமைச்சர் வினோத்

“முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” - அமைச்சர் வினோத்
Updated on
2 min read

கும்பகோணம்: “ஆக.3ம் தேதி தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா செல்வது தொடர்பாக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.

கும்பகோணம் கோட்டத்தில் உள்ள காவிரி, அரசலாறு, பழவாறு, மோரி மற்றும் ஆழியனாறு வாய்க்கால்களில் ரூ.70 லட்சம் மதிப்பில் மொத்தம் 31 கி.மீ தூரம் தூர்வாரும் பணியினை வேளாண் துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் கோட்டத்தில் உள்ள காவிரி, அரசலாறு, பழவாறு, மோரி மற்றும் ஆழியனாறு வாய்க்கால்களில் தூர்வாரி பல ஆண்டுகள் ஆனதால், அந்த ஆறு மற்றும் வாய்க்கால்களில் கழிவுநீர் புகுந்து துர்நாற்றம் வீசுவதுடன், ஆகாய தாமரைகள், செடி, கொடிகள் மண்டி அதில் உள்ள விஷ ஜந்துக்களால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

மேலும், மழை காலங்களில் நீர் செல்லாமல் தேங்குவதால் பக்கவாட்டுகளில் உள்ள புறநகர் பகுதிகள் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் ஆண்டுதோறும் மழை காலங்களில் பொது மக்கள் கடும் வேதனைக்குள்ளாகி வந்தனர்.

இதைத்தொடர்ந்து வேளாண் துறை அமைச்சர் வினோத்திடம், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரி, வாய்க்கால்களில் பழமையான முறைப்படி காவிரி நீர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி தனியார் வங்கி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில், அம்மாப்பேட்டை புறவழிச் சாலையில் இருந்து சாக்கோட்டை வரை அரசலாற்றில் 6 கி.மீ. தூரம், வளையப்பேட்டையில் இருந்து மேலக் காவிரி வரை காவிரி ஆற்றில் 3 கி.மீ. தூரம், திருமண்டங்குடியில் இருந்து கள்ளப்புலியூர் வரை 10 கி.மீ.தூரம் பழவாறு, ஆரியப்படையூர் இருந்து கிருஷ்ணாபுரம் வரை உள்ள ஆழியனாறு வாய்கால் 6 கி.மீ.தூரம், மோரி வாய்க்கால் தலைப்பில் இருந்து 6 கி.மீ. வரை என மொத்தம் 31 கீ.மீ. தூரம் தூர் வார முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று செட்டிமண்டபம் மோரி வாய்க்கால்களில் பொக்லீன் இயந்திரம் மூலம் நடைபெறும் தூர்வாரும் பணியினை வேளாண் துறை அமைச்சர் வினோத் கொடியசைத்து தொடங்கி வைத்து, மேற்கொள்ள இருக்கும் தூர்வாரும் பணியின் வரைபடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் நீர் வளத்துறை உதவி செயற் பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் வேளாண் துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கும்பகோணத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆறு, வாய்க்கால்கள் தூர்வாராமல் இருந்தன. தற்போது தனியார் வங்கி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதி பெற்று, தூர்வாரும் பணியினை தொடங்கி உள்ளோம். இந்தப் பணிகள் 2 மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஆறு, வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளன.

“எல் நினோவால்” காலநிலை மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒருவேளை கடுமையான வெயில் அல்லது கடும் மழை பெய்யலாம். இதனால் டெல்டா மற்றும் மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு, எந்த பயிர் விளைவித்தால் அதற்கு ஏற்றாற்போல இருக்குமோ, அந்த பயிர்கள் குறித்த விரைவில் நாங்கள் அறிவிப்போம்.” என்றார்.

ஆக.3-ம் தேதி தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா போவதாக சொல்லியிருந்தீர்கள், ஆனால் பள்ளிகல்வித் துறை அமைச்சர் ராஜமோகன், அதெல்லாம் உறுதியான தகவல் இல்லை என்று சொல்லியிருக்காரே என்ற கேள்விக்கு, “இது தொடர்பாக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என்று அமைச்சர் வினோத் கூறினார்.

“முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” - அமைச்சர் வினோத்
வைரலானது சூரி​யின் ‘மண்​டாடி’ பட புரமோ பாடல்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in