

சென்னை: அரசு அலுவலகங்களில் வாரம் ஒருநாள் மரபு ஆடை தினம் கடைப்பிடிக்கப்படும் என்றும், முதல்வரை தலைவராகக் கொண்டு தமிழ் சங்கம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ் மோகன் அறிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன், வன்னியரசு, விஜயலட்சுமி, இயல், இசை, நாடகமன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி பங்கேற்றனர்.
விழாவில், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்தின் எல்லைகளைக் காக்கப் போராடிய எல்லைக் காவலர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கு பாடுபட்ட தமிழறிஞர்களுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: முதல்வர் வாரத்தில் ஒருநாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருகிறார்.
அதேபோல் தலைமைச் செயலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் ஒருநாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி, சட்டை அணிந்து வர நடவடிக்கை வேண்டும் என முதல்வரிடம் கோரினேன்.
வேட்டி, சட்டை அணிவது தமிழர்களின் மரபைப் போற்றுவதுடன் நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
இதன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இனி வாரத்தில் ஒருநாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘மரபு ஆடை தினம்’ கடைப்பிடிக்கப்பட உள்ளது.
அதேபோல், தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும். ஏற்கெனவே செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, அந்தச் சங்கத்துக்கு முதல்வரே தலைவராகச் செயல்படுவார்.
மீண்டும் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் தொடங்கி உலகெங்கும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ‘தமிழ் பேச்சு, எங்கள் உயிர் மூச்சு’ என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் பள்ளிகளில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலக் கொடி
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, தமிழின் பெருமையையும் தமிழகத்தின் அடையாளத்தையும் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடிக்கு இணையாகத் தமிழ்நாட்டுக்கென தனிக் கொடி உருவாக்க வேண்டும்.
தமிழ்நாடும் தமிழர் பண்பாடும் என்று வரும்போது, டெல்லியில் இருந்து எத்தகைய ஆதிக்கம் வந்தாலும், உயிரே போனாலும் கொள்கை வழியில் நிற்போம் என்றார்.