பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு: பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு: பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது
Updated on: 
1 min read

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

பின்னர் அது தொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் விஜய் ஆனந்த், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “அடையாறு முகத்துவாரத்துக்கு அருகில், கடலோர ஒழுங்கு முறை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 15 மாடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்த பகுதி நீரில் மூழ்கியது. ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பகுதியில் மீனவர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அறிவிப்புக்கு எதிரானது. இந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரிகள் சுதந்திரமான ஆய்வை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை இந்தப் பகுதியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு: பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in