

சென்னை: முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் - அதிகாரிகள் செப்.28-ம் தேதிமுதல் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளநிலையில், கட்டணமில்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்க வங்கிகள் சலுகை அறிவித்துள்ளன.
வாரத்தில் 5 நாட்களுக்கு வேலைத்திட்டத்தை அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிஎல்ஐ (லாபத்தின் அடிப்படையில் இணைப்பு ஊக்கத்தொகை) சமமாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஐக்கிய மன்றமும், இக்கோரிக்கைகளுடன் ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் நாடு தழுவிய அளவில் செப்.28 (நாளை) முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த 3 நாட்கள் வேலை நிறுத்தத்துக்கு முன்னதாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால், 5 நாட்கள் வங்கிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. 5 நாட்கள் வங்கிகள் செயல்படா மல் போனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார் கள் என கருதி செப்.27 (ஞாயிறு) வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது.அதன்படி,தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்,அனைத்து தனியார்வங்கிகள் இன்று (செப்.27) செயல்படுவதற் கான ஏற்பாடு நடைபெறுகிறது.
3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம்-களில் பணம் எடுத்தல் போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அனைத்து வங்கி
களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை அனுப்பியுள்ளது. இதுதவிர, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதாவது வேலை நிறுத்த காலத்தில் பொதுமக்கள் எந்த வங்கி ஏடிஎம்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏடிஎம் மையங்களை பயன்படுத்தலாம். இன்று வங்கிகள் செயல்படும் நிலையில், அகில இந்தியவங்கி அதிகாரிகள் சங்கத்தினர்வேலையில் ஈடுபடப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இன்று (ஞாயிறு) வங்கி செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையின் சட்டப்பூர்வ அந்தஸ்து (தகுதி) குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என ஆர்பிஐ-க்குஅகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.