

நாமக்கல்: திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜின் அரசியல் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், பேச்சை பாதியிலேயே நிறைவு செய்தார்.
திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகளில் அருண்ராஜ் கலந்து கொண்டார். திருச்செங்கோடு நகராட்சி 11-வது வார்டு சின்னப்பாவடி தெருவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் மதுக்கடைகள் இருக்கலாம். அதில் தவறில்லை. விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுவதுதான் தவறு. படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிய திமுக, அதை நிறைவேற்றியதா?” என்றார்.
ஜனநாயகன் திரைப்படம் மற்றும் தூத்துக்குடி அஜிதா பிரச்சினை குறித்து விஜய் எந்த கருத்தும் சொல்லாமல் இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் சொல்வதைத் தவிர்த்து, பேட்டியை நிறைவு செய்தார்.
முன்னதாக பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து அருண்ராஜ் பேசும்போது, தவெக தலைவர் விஜய் குறித்து பொதுமக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சின்னப்பாவடி பொங்கல் விழாக் குழு நிர்வாகி தனசேகர் என்பவர் குறுக்கிட்டு, “பொங்கல் விழா பற்றி மட்டும் பேசுங்கள். அரசியல் பேச வேண்டாம். அதற்கென தனி மேடை போடுங்கள் பேசுங்கள். பொதுவான விழா நடக்கும் இடத்தில் உங்கள் கட்சி அரசியலை இங்கு பேச வேண்டாம்” என்றார்.
இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்று கூறி பேச்சை பாதியிலேயே நிறைவு செய்தார். இந்த நிகழ்வால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.