

சென்னை: ‘பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நவ.3-க்குள் நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்’ என்று சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 10 மணியளவில் அனைத்து செவிலியர்களையும் கைது செய்ய போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. சில செவிலியர்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து, செவிலியர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிகமாக ஒத்திவைப்பு: இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. பின்னர், சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை நடத்தி நவ.3-ம் தேதி வரை அவகாசம் கேட்டதால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செவிலியர்கள் அறிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் சுந்தரி கூறும்போது, “சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ.3-க்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.