

டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று 9 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர். இரவில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். படம்: பிடிஐ
புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று பேரணி நடத்தினர். பின்னர் அவர்கள் 9 மணி நேர தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நிறைவுப் பெற்று உள்ளது. இதில் சுமார் 13 கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இண்டியா கூட்டணியில் உள்ள 20 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த சுமார் 300 எதிர்க்கட்சி எம்பிக்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்கு அவர்கள் பேரணியாக சென்றனர். அகில இந்திய வானொலி நிலையம் அருகில் போலீஸார் தடுப்புகளை அமைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள், தலைவர்கள், தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தடுப்புகளின் மீது ஏறி கோஷமிட்டனர். அப்போது ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏந்தி ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கோஷமிட்டார். பின்னர் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: நான் உட்பட 300 எம்பிக்களும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்திக்க அனுமதி கோரினோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயகத்தை அழித்து வருகின்றனர். அவர்கள் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களை டெல்லி போலீஸார் வேனில் ஏற்றினர். ஆனால் ராகுலும் பிரியங்காவும் வேனில் இருந்து இறங்கி மீண்டும் வானொலி நிலைய வளாகத்தில் நுழைந்தனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, 50 எம்பிக்கள் உட்பட 250 பேர் வானொலி நிலைய வளாகத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களின் தர்ணா நீடித்தது. இரவு 8 மணி அளவில் டெல்லி போலீஸார் வானொலி நிலைய வளாகத்தில் நுழைந்தனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் எம்பிக்களை போலீஸார் கைது செய்து அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அவர்கள் அனைவரும் கிங்ஸ்வே முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. இதன் தொடர்ச்சியாக இண்டியா கூட்டணியின் கூட்டத்தை திமுக தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற பேரணியையும் அந்த கட்சி புறக்கணித்தது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மிக்கும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில் டெல்லி பேரணியை ஆம் ஆத்மியும் புறக்கணித்தது. ஒடிசாவின் பிரதான எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் இண்டியாகூட்டணியில் இணையாமல் தனித்து செயல்பட்டு வந்தது. அந்த கட்சியின் தலைவர்கள் டெல்லி பேரணியில் நேற்று பங்கேற்றனர்.