அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் 2-வது முறையாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடரும் செவிலியர்கள்

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று  5-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. | படம்: எம்.முத்துகணேஷ் |

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. | படம்: எம்.முத்துகணேஷ் |

Updated on
2 min read

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சருடன் 2-வது முறையாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தை செவிலியர்கள் தொடர்கின்றனர்.

பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.

அன்றைய தினம், சங்க நிர்வாகிகளுடன், சுகாதாரத்துறை செயலர் செந்தில் குமார் நடந்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, செவிலியர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஊரப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கேயே செவிலியர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று சங்க நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சரின் கோரிக்கையை சில சங்கங்கள் ஏற்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து, நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறிவிட்டு சென்றனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கத்தினருடன் பேச்சு நடத்தப்பட்டு, அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்களைப்போல், தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைக்கு விரைந்து அரசாணை வெளியிடப்பட இருக்கிறது.

கடந்த 2014-15-ல் தற்காலிக செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். 2 ஆண்டுகள் பணி செய்த பின், செவிலியர் துறையில் காலிப்பணியிடம் உருவானால், பணி நிரந்தரம் என சொல்லப்பட்டு பணி நியமனம் நடந்துள்ளது. இந்த முறையே தவறு.

ஆனாலும், 7,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்றப்பின், 3,614 பேரை பணி நிரந்தரம் செய்துள்ளோம். தற்போது, 8,322 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம் ரூ.14,000-ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

723 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர். மற்ற, 7,599 பேருக்கு காலிப்பணியிடங் களுக்கு ஏற்ப பணி நிரந்தர ஆணை வழங்கப்படும். கரோனா காலத்தில் பணியாற்றிய 716 பேரும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போராட்டம் தொடரும்: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுக் கழகம் செயலர் சுபின்கூறுகையில், “அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கையை ஏற்பதாக தெரியவில்லை.

8 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், அதிக வேலை செய்து வருகிறோம். ஆனால், 723 பணியிடங்களை காரணம் காட்டி, மற்றவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்வோம் என்பதை ஏற்க முடியாது. எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

<div class="paragraphs"><p>தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று  5-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. | படம்: எம்.முத்துகணேஷ் |</p></div>
சமமற்ற நன்கொடையால் பாஜக வென்றது: செல்வப்பெருந்தகை கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in