

சென்னை: சுகாதாரத் துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தமிழகம் முழுவதும் செவிலியர்கள் 3-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்று கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டனர். இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கும் போராட்டம் தொடர்ந்தது.
இதற்கிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால், நேற்று 3-வது நாளாக நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நேற்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர் பணியிடங்கள் கோருகின்றனர். அந்த காலி பணியிடங்களே இல்லாத நிலையில், இந்த கோரிக்கையை ஏற்க இயலாது. மக்களின் பாதிப்பை உணர்ந்து செவிலியர்கள் செயல்பட வேண்டும்” என்றார்.
இந்நிலையில், செவிலியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்கள்தொகை அதிகரிப்பும், நோய்களின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், செவிலியர்களின் தேவையும் அதிகமாக இருக்கிறது. எனவே, காலி பணியிடங்களை நிரப்புவதோடு, தேவைப்படும் மருத்துவமனைகளில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தி, தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா: சம வேலைக்கு சம ஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என செவிலியர்கள் ஆதங்கப்படுகின்றனர். எனவே, கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து செவிலியர்களையும் நிபந்தனையின்றி உடனே விடுவிக்க வேண்டும். பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.