

பிளக்ஸ் பேனரை அகற்றியதை கண்டித்து தாராபுரத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட நாதகவினர்.
தாராபுரம்: தங்கள் கட்சியின் பிளக்ஸ் பேனரை அகற்றியதை கண்டித்து தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
கடந்த 30-ம் தேதி முதல்வர் விஜய் தாராபுரம் வந்தபோது நாதக சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை போலீஸார் அகற்றியதாக கூறப்படுகிறது. அதேபோல நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடைபெற்ற நிலையில் நாதக தேர்தல் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை போலீஸார் அகற்றினர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கட்சி நிர்வாகியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதைக் கண்டித்து நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதே நேரம் மு.க.ஸ்டாலின் வாகன பேரணி அவ்வழியாக வந்ததால் பரபரப்பு நிலவியது. அதற்குள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நாதக நிர்வாகியை போலீஸார் விடுவித்தனர். இதையடுத்து, கட்சியினர் கலைந்து சென்றனர்.