வில்லிவாக்கத்தில் திருநங்கையை களமிறக்கும் நாதக

வில்லிவாக்கத்தில் திருநங்கையை களமிறக்கும் நாதக
Updated on
1 min read

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் சட்டப்பேரவை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் களம் இறங்கி போட்டியிட உள்ளதாகவும், சென்னை வில்லிவாக்கத்தில் திருநங்கை ஒருவரை வேட்பாளராகவும் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நாதக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தத் தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் பலத்தைக் காட்டும் விதமாக, வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, சீமான் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 200 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் சீமான் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பாதியளவு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டனர்.

அதன்படி, எழும்பூர் தொகுதியில் எ.சரண்யா, ஆர்.கே.நகரில் வெண்ணிலா தாயுமானவன், ஆயிரம் விளக்கில் மு.களஞ்சியம், அண்ணாநகரில் சி.சங்கர், துறைமுகத்தில் பெனசான் ஷெரிப், வேளச்சேரியில் கீர்த்தனா, ராயபுரத்தில் ஆ.பாபுமைலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

குறிப்பாக, வில்லிவாக்கம் தொகுதியில் சமூக ஆர்வலரான திருநங்கை ரோஷினி வேட்பாளராக நிறுத்தப்பட இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 2021 தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு திருச்சி மாநாட்டில் வெளியாகும் என்றும் கட்சி நிர்வாகிகள் கூறினர்.

வில்லிவாக்கத்தில் திருநங்கையை களமிறக்கும் நாதக
“காங்கிரஸுடன் தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை” - கனிமொழி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in