

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறது.
அதன்படி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குழுவின் தலைவர் கனிமொழி எம்பி மற்றும் இதர உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரவை, ஆதிதிராவிடர் மகாஜனசபை, அனைத்து முதலியார் வேளார் சங்கங்களின் பேரவை, இளைஞர் படுகர் சங்கம், மக்கள் மறுமலர்ச்சி கழகம், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் உள்ளிட்ட சமுதாய பிரதிநிதிகள், வணிகர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் கோரிக்கைகளையும், மனுக்களையும் அளித்தனர்.
கூட்டத்தில் கனிமொழி பேசுகையில், ‘‘சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மண்டலந்தோறும் சென்று அனைத்து தரப்பையும் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். இதன்மூலம் திமுக தேர்தல் அறிக்கையை மக்களின் தேர்தல் அறிக்கையாக உருவாக்கும் பணிகளை செய்து வருகிறோம். திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்’’ என்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வரின் அறிவுரையின்படி பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட உள்ளது. அதன்படி சென்னையில் இன்று (நேற்று) சமூக அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டோம். அதில் எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொள்ளலாம் என்று பரிசீலனை செய்து முதல்வரிடம் அனுமதி பெற்று தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியிடப்படும்.
அதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதி எண்ணிக்கை குறித்து எதுவும் பேசவில்லை. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழுதான் முடிவு செய்யும். நாடாளுன்றத்தில் எம்பி-க்கள் இடைநீக்கம் செய்ததை ஏற்க முடியாது. மேலும். கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.