வாக்குப்பதிவு இயந்திரங்களில் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இல்லை: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ
திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ
Updated on
2 min read

சென்னை: ‘கொளத்தூர், உத்திரமேரூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நடவடிக்கை மீது நம்பிக்கை இல்லை’ என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ குற்றம்சாட் டியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், 5 தொகுதிகளில் இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி சென்னை கொளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ராஜபாளையம் ஆகிய 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சரிபார்ப்பில் விவிபாட் இயந்திரங்கள் பழுதானதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்த சரிபார்ப்பு பணியில், உத்திரமேரூர் தொகுதியில் நேற்று விவிபாட் இயந்திரம், வாக்குகள் பதிவாகும் இயந்திரம், வாக்கு செலுத்தும் இயந்திரம் ஆகியவை வேலை செய்யவில்லை.

கொளத்தூர் தொகுதியில் ஜூலை 29-ம் தேதி முதல் 14 இயந்திரங்களில் சரிபார்ப்பு பணிகள் தொடங்கின. 30-ம் தேதி 2 இயந்திரங்களில் ஒன்றில் விவிபாட் வேலை செய்யவில்லை. அதனால் அதை பாதியிலேயே நிறுத்தி விட்டோம். நேற்றும் ஒரு விவிபாட் வேலை செய்யவில்லை.

75-வது வாக்குச் சாவடியின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முகவரி பட்டைகள் எழுதப்படாமல் புதிதாக இருந்தன. அதில் தொகுதி எண், வாக்குச்சாவடி எண் எழுதப்படவில்லை. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, அது மனித தவறு என தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படாததால் இது முறையான தேர்தல் இல்லை. இந்த மொத்த சரிபார்ப்பு நடைமுறையின் மீதும் நம்பிக்கை இல்லை.

தேர்தல் சரியான முறையில் நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையத்தி லிருந்து சான்றளிக்கப்பட்ட கடிதம் வந்த பிறகு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடி சரியான தீர்ப்பை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் கூறும்போது, ‘‘நாங்கள் கேட்ட 10 இயந்திரங்களில் ஒன்றில் பழுது எனக் கூறுவதை ஏற்க முடியாது. விவிபாட் சீட்டுகள் சரிபார்க்கப்படாததால் இப்போதைய நடவடிக்கையில் திருப்தி இல்லை. எனவே நீதிமன்றத்தை நாட உள்ளோம்’’ என்றார்.

தேர்தல் அதிகாரிகள் விளக்கம்: இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் கூறும்போது, ‘‘கொளத்தூர் தொகுதி, 75-வது வாக்குச் சாவடியில் 412 வாக்குகள் வரை சரியாக பதிவானது. அதன் பிறகு விவிபாட் இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை. இது தொழில்நுட்ப கோளாறு.

இதுபோன்று ஏற்படும் பட்சத்தில் புதிய விவிபாட் இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவை தொடரலாம் அல்லது மொத்தமாக வேறு வாக்குச்சாவடியில் பயன்படுத்திய இயந்திரங்களை சரிபார்க்கலாம் என்ற தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை அவர்கள் ஏற்கவில்லை.

மாதிரி வாக்குப்பதிவை அவர்கள் தொடர விருப்பமில்லை. முகவரி பட்டையில் சரியாக எழுதவில்லை என்று குற்றம்சாட்டினர். அவர்கள் கூறிய காரணங்கள் எதிலும், வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை’’ என்றார்.

உத்திரமேரூர் திமுகவினரின் குற்றச்சாட்டு குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா கூறும்போது, ‘‘நேற்று கோளாறு ஏற்பட்ட இயந்திரத்துக்கு மாற்று இயந்திரத்தைத் தேர்வு செய்வது குறித்த விருப்பத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. பின்னர் வேறுஒரு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சரிபார்ப்புப் பணி நடந்தது’’ என்றார்.

திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ
“இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு இளைஞர் சக்தியே முக்கிய காரணம்” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in