தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில், 32 பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் 2017-2018-ல் 40 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்டவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் ஆய்வு நடத்தி, விதிகளை மீறி பேராசிரியர் நியமனம் நடந்திருப்பதாக 2021 ஆக.11-ல் அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கு 8 பேர் முறையாக விளக்கம் அளித்ததுடன், நீதிமன்றத்தையும் நாடினர்.
மீதமுள்ள 32 பேரின் நியமனத்துக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அப்போதைய தமிழக ஆளுநரும், பல்கலை. வேந்தருமான பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, 2023 அக். 27-ம் தேதி அப்போதைய துணைவேந்தர் திருவள்ளுவன், பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் நிறைவு வழங்கினார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு அக். 3-ம் தேதி திருவள்ளுவனிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நோட்டீஸ் அனுப்பினார்.
தொடர்ந்து, துணைவேந்தரின் விளக்கம் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு நவ.19-ம் தேதி திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டார்.
மேலும், இந்த முறைகேடு நியமனம் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, கடந்த செப். 9-ம் தேதி ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இதனடிப்படையில், ஆளுநரின் முதன்மைச் செயலாளர் கிர்லோஷ் குமார், அக்.10-ம் தேதி சிண்டிகேட் கூட்டத்தை நடத்தி, 60 நாட்களுக்குள் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்று பல்கலை.க்கு கடிதம் அனுப்பினார்.
இதன்பேரில் பேராசிரியர்கள் 32 பேருக்கும் விளக்கம் கேட்டு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழ்ப் பல்கலை. பேராசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.