எஸ்ஐஆர் படிவத்தை டிச.14 வரை அளிக்கலாம்: அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

தமிழகத்தில் பணி 100% நிறைவு
எஸ்ஐஆர் படிவத்தை டிச.14 வரை அளிக்கலாம்: அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த அவகாசத்தை டிச.14-ம் தேதி வரை மேலும் 3 நாட்கள் நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் வழங்குவது, அதை பூர்த்தி செய்து பெறுவது, மற்றும் பதிவு செய்யும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படிவம் விநியோகம், பூர்த்தி செய்து திரும்ப பெறுவது போன்றவற்றில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை உள்ளிட்ட காரணங்களால், அவகாசத்தை நீட்டிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதை ஏற்று, எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நேற்று (டிச.11) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தைப் பொருத்தவரை, நேற்றைய நிலவரப்படி எஸ்ஐஆர் படிவம் விநியோகப் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதாவது, 6 கோடி 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றும் பணியும் 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் நேற்று முடிவடைய இருந்தன.

இந்த சூழலில், தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி பார்வையாளர்களான ராமன்குமார், குல்தீப் நாராயண், நீரஜ் கர்வால்,விஜய் நெஹ்ரா ஆகியோருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்று பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினார். இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல்: இந்நிலையில், எஸ்ஐஆர் படிவம் விநியோகம், பூர்த்திசெய்து சமர்ப்பித்தல், பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான அவகாசத்தை மேலும் 3 நாட்கள், அதாவது டிச.14-ம் தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதிவெளியாகும். அன்று முதல், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். பின்னர், அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெறும்.

தமிழகம்போல, குஜராத்திலும் எஸ்ஐஆர் பணிக்கான அவகாசம் டிச.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான் நிகோபரில் இந்த அவகாசம் டிச.18 வரையும், உத்தர பிரதேசத்தில் டிச.26 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கும் அவகாசம் ஏற்கெனவே டிச.18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஐஆர் படிவத்தை டிச.14 வரை அளிக்கலாம்: அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் முக்கிய ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in