

துரைமுருகன்
படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர்: “அரசியலுக்கு புதிதாக நடிகர்கள் வருவது குறித்து கேட்கிறீர்கள். இதுபோன்ற முயற்சிகள் எதுவும் நிலைக்காது. எல்லோரும் எம்ஜிஆர், விஜய் ஆகிவிட முடியாது” என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லத்தில் திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் இன்று (அக்.26) பேசுகையில், ‘‘மழை மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது என்பதை மக்களுக்கு முன்கூட்டியே வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
எத்தனை கால்வாய்கள் தூர்வாரப்பட்டன, கரைகள் எங்கு உயர்த்தப்பட்டன, எத்தனை மணல் மூட்டைகள் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர் என்ற எந்தவித விவரமும் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.
வெள்ளம் தேங்கிய பின்னர் மரங்களை வெட்டுவதும், மண் எடுப்பதையும் விளம்பரத்துக்காகவும், படம் காட்டுவதற்காகவும் மட்டுமே அமைச்சர்கள் செய்கிறார்களே தவிர, நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால்தான் தற்போது வெள்ளநீர் ஓரளவாவது வடிகிறது.
புதிய பணிகளைத் தேர்வு செய்யத் தெரியாமல், பழைய டெண்டர்களை ரத்து செய்துவிட்டு மீண்டும் டெண்டர் விடுவதில்தான் இவர்கள் குறியாக உள்ளனர்.
தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இருந்தும், மாதத்துக்கு ரூ.2,000 கோடி அளவுக்கு வெளியில் மின்சாரம் வாங்குவது ஏன் என்று அரசு தெளிவுபடுத்தவில்லை.
மின் உற்பத்தி நிலவரம் என்ன, பற்றாக்குறை என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் மின் கொள்முதல் செய்வதில் பெரிய மர்மம் நீடிக்கிறது.
நாளிதழ்களை திறந்துப் பார்த்தாலே நாள்தோறும் அடிதடி, கொலை, கொள்ளைச் சம்பவங்களே நிரம்பியுள்ளன. இதன்மூலம் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
ஆளும் தவெக கட்சியைச் சேர்ந்தவர்களே போதைப்பொருள் விவகாரங்களில் சிக்குவதும், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியான பிறகே அரசு பெயரளவுக்கு நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
அரசியலுக்கு புதிதாக நடிகர்கள் வருவது குறித்து கேட்கிறீர்கள். ஒரு பகுதியில் ஒரு இளநீர் கடை நன்றாக ஓடினால், மற்றவர்களும் ஆளாளுக்கு அதேபோல கடை வைக்க நினைப்பது போன்றதுதான் இது. இதுபோன்ற முயற்சிகள் எதுவும் நிலைக்காது. எல்லோரும் எம்ஜிஆர், விஜய் ஆகிவிட முடியாது.
தமிழகத்தில் கொள்கை, லட்சியம், தார்மிக ஆதரவு என்பதெல்லாம் தற்போது மாறிவிட்டது. தேர்தல் சீட் கிடைத்தால் ஒரு கூட்டணி, கிடைக்காவிட்டால் மற்றொரு கூட்டணி என்ற மனநிலைக்குக் கட்சிகள் சென்றுவிட்டன. யார் எந்தக் கூட்டணியில் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. தவெக ஆட்சியைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘விளங்காது’ என்றுதான் கூற வேண்டும்’’ என்றார்.