

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சருக்கு தேர்தலில் போட்டியிட சீட் இல்லாததால் பாஜக அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளர்கள் சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், கட்சியிலிருந்து விலகுவதாக அந்தத் தொகுதி நிர்வாகிகள் அறிவித்தனர்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு முதல்வர், 3 அமைச்சர்கள், பேரவை துணைத் தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவுக்கு பேரவைத் தலைவர், 2 அமைச்சர்கள் தரப்பட்டன.
ஆட்சியில் இடம்பெற்றதால் பாஜக வளர்ச்சி பெறும் என கட்சி தலைமை கருதியது. ஆனால், எதிர்மறையாக புதுவை பாஜகவில் கோஷ்டிகள் உருவானது. ஆட்சி அமைந்த நாள் முதலே அமைச்சரவையில் இடம்பெறாத பாஜக எம்எல்ஏக்கள் தங்களுக்கு வாரிய பதவி கேட்டு தொடர்ந்து வலியுறுத்தினர். போராட்டங்களும் நடத்தினர். சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க கோரிக்கை விடுத்தனர். அதுவும் நிறைவேறவில்லை.
கோஷ் பூசல் அதிகரித்த சூழலில், கட்சி பிளவை தடுக்க மேலிட உத்தரவின் பேரில் அமைச்சர் சாய் சரவணக் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சர் பதவியை, அதிருப்தி எம்எல்ஏ ஜான்குமாருக்கு தந்தனர். அதே நேரத்தில் பட்டியலின அமைச்சர் சாய் சரவணக் குமார் ராஜினாமாவால் அவரது ஆதரவாளர்கள் கொதித்து போய் பாஜக தலைமைக்கும் அரசு தரப்புக்கும் எதிராக கேள்வி எழுப்பி மறியலில் அப்போது ஏற்பட்டு போஸ்டர் யுத்தம் நடத்திய சம்பவங்களும் நடந்தது.
இந்நிலையில், தற்போது பாஜக வேட்பாளர் பட்டியலை அறிவிக்க இருந்தது. அதில் தனக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து வியாழன்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து சாய் சரவணக் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், இன்று பாஜக மேலிடம் பட்டியலில் சாய் சரவணக் குமார் பெயர் இல்லை. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், ஊசுடு தனி தொகுதி பாஜக நிர்வாகிகள் பாஜக அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக லெட்டர் பேடுகளை கிழித்து எறிந்து, சூடம் ஏற்றி பாஜகவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டனர்.
‘தனித் தொகுதியில் பாஜகவை வளர்த்தவருக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை. அதையடுத்து சாய் சரவணக் குமார் தவெகவுக்கு மாற உள்ளார்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
அவரது ஆதரவாளர்கள் பாஜக துண்டை தூக்கி எறிந்து தவெக துண்டை கழுத்தில் போட்டனர். இது பற்றி சாய் சரவணக் குமார் தரப்பில் கேட்டதற்கு, தவெகவில் போட்டியிட உள்ளார். முறைப்படி விரைவில் அறிவிப்பார் என்கின்றனர்.