“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் நிர்மல் குமார் |கோப்புப் படம்

அமைச்சர் நிர்மல் குமார் |கோப்புப் படம்

Updated on
1 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ‘பாஸ்’ சர்ச்சை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடு பணிகள் 100% நிறைவடைந்தது. காவல், சுகாதார துறையினர் இரண்டு ஷிப்டுகளில் பணி செய்கின்றனர். மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோயில் மேல் தளத்தில் எத்தனை பேரை அனுமதிப்பது என்பது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. 9000 பேர் அனுமதிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அவர்களை அனுமதிக்க முடியுமா என்பது பற்றி ஆய்வுகள் (ஸ்டெபிலிட்டி செக்) செய்து கொண்டிருக்கிறோம். அதன் பின்னரே இறுதி முடிவு எட்டுவோம். பாஸ் விஷயத்தில் நாங்கள் எந்தத் தலையீடும் செய்யவில்லை. அவற்றை கண்ணில் கூட பார்க்கவில்லை.

பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் 2000 பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் மேலே அனுமதிக்கப்படுவார்கள். தவிர, சித்திரை வீதியில் மக்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இது கோபுரத்துக்கு செல்வோர் வந்து செல்வதற்கான வழி மட்டுமே.

மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு பணியில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. மக்கள் பாதுகாப்பு சார்ந்து மட்டுமே பணியாற்றுகிறோம். அறங்காவலர்கள் குழுவை தொடர்பு கொண்டு அவர்கள் தேவையை பூர்த்தி செய்யச் சொல்கிறேன்.” என்றார்.

தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு

அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறை செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு.” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in