

சென்னை: சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நேப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கியக் குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.
பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து, அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். அதனால் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் உள்ளதா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் உணவுப்பொருள் வழங்கல் துறைக்கு விண்ணப்பித்த போது, அதுபோல எந்த திட்டமும் இல்லை என பதிலளிக்கப்பட்டது.
அதேபோல சுகாதாரத் துறை அளித்த பதிலில், மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டதன் மூலம், ரேஷன் கடைகளில் வழங்கும் திட்டம் ஏதும் அமலில் இல்லை என்பது தெளிவாகிறது.
அதனால் ஏழைப் பெண்கள், கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்களை வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும், பள்ளி மாணவிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த திட்டங்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
ஆனால், அரசின் இந்த திட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாப்கின் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர்? பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்கள் எண்ணிக்கை எவ்வளவு ஆகிய விவரங்களை வழங்கும்படி, தமிழக அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.