

சென்னை: “இரண்டு மனைவிகள் இருந்தால் இரண்டு இடத்தில் தீபம் ஏற்ற முடியாது” என தமிழ் கடவுள் முருகனை கொச்சைப்படுத்துவதா? என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்துடன், வரலாற்றைத் திரித்து தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.
மேலும், இந்து மதத்தின் நம்பிக்கையையும், சனாதன தர்மத்தையும் அவமதிக்கும் வகையில், தமிழ் கடவுள் முருகனையும் திருப்பரங்குன்றம் வழிபாட்டு உரிமையையும் கொச்சைப்படுத்தும் வகையில் முருகனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும், தீபம் இரண்டு இடத்தில் ஏற்ற முடியாது.
இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காக இந்தத் தூண்களைப் பயன்படுத்தினர். இந்தக் கம்பங்கள் கார்த்திகை தீபத்துக்காக அல்ல, மாறாக முனிவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட வெளிச்சத்துக்காகவே உருவாக்கப்பட்டவை என்று பொய் பிரச்சாரங்கள் ஆதாரமில்லாமல் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள், ஆன்மிக அன்பர்கள், சட்டப்படி உரிமை போராட்டம் நடத்தும் போது, தமிழக அரசு சனாதன தர்மத்துக்கு எதிராக, இந்து மத கோட்பாடுகளை கொச்சைப்படுத்தும் வகையில், இந்து மத கடவுள்களை இழிவு படுத்தும் வகையில், இந்து மத நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.