

மதுரை: "ஊழல் செய்தால், தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" என அமைச்சர் நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.
மூக்கையாத்தேவரின் 47வது நினைவுத்தினத்தை யொட்டி, மதுரை உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்திலுள்ள அவரது நினைவிடத்தில் தவெக சார்பில், அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வருசநாடு மேகமலை விவகாரத்தில் எந்த விவரம் உண்மையானது என, உண்மை நிலையை நீதிமன்றத்தில் எடுத்து சொல்லாமல் கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் விட்டு விட்டனர். அந்த வழக்கை நடத்தும்போது, எந்த அக்கறையையும் அவர்கள் காட்டாமல் நடத்தி இருப்பது தெரிகிறது.
வழக்கு நீதிமன்றத்திலுள்ள சூழலில் மக்களின் இன்றைய உண்மை நிலை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்படும். அந்த மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கச் செய்வோம். உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகள் முடங்கியது என்பது திமுக நிர்வாகிகளின் காழ்ப்புணர்ச்சியால் நடந்த ஒன்று. அதை சரி செய்கிறோம். 58ம் கால்வாய்க்கு நிரந்தர அரசாணை கிடைக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை இயல்பானது தான். எவ்வித காழ்புணர்ச்சியும் கிடையாது. எந்த பொய் வழக்கும் போட முடியாது. பணம் வாங்கி கொண்டு வேலைக்கு அமர்த்தியதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வழக்குக்காக கே.என். நேரு வீட்டில் சோதனை நடத்தியிருக்கலாம் என கருதுகிறேன். ஊழல் செய்தால், தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது.
ஒரு சில நிகழ்வு குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், மாநில நிர்வாகிகளுடன் பேசி வருகிறோம். அவர்களோடு இணைந்து பணியாற்றுவோம். மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, மக்களுக்கு என்ன தேவையோ அதை நாளை சட்டப்பேரவையில் முதல்வர் பேசுவார். என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் விஜய் மகாலிங்கம், கருப்பையா, கார்த்திகேயன், தங்கப்பாண்டி, கல்லாணை உள்ளிட்ட நிர்வாகிகள், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து அரசடியிலுள்ள மூக்கையாத்தேவரின் சிலைக்கும் அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தார்.