100 ஆண்டு பழமையான கோயில்களில் புதிய கட்டுமானம் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தாமதம்
100 ஆண்டு பழமையான கோயில்களில் புதிய கட்டுமானம் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ‘புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தாமதம் செய்வதால் தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் புதிதாக எந்தவொரு கட்டுமானங்களையும் கட்டக்கூடாது’ என தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் முன்பாக வணிக வளாகம் கட்ட தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர்

அப்போது மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ‘தமிழகத்தில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க உயர் நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டும் இதுவரையிலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என குற்றம்சாட்டினார்.

இணையதளத்தில் அறிவிப்பு: அதற்கு அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான, பழமையான கோயில்களை பாதுகாக்கும் வகையில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைப்பதற்கான விதிகள் வகுக்கப்பட்டு விட்டது. ஆணையத் தலைவரை தேர்வு செய்வதற்காக தலைமை செயலாளர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று தொல்லியல் துறையின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று தினசரி பத்திரிகைகளில் ஏன் விளம்பரம் கொடுக்கவில்லை என்றும், இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பை எல்லோரும் பார்த்திருப்பர் என எப்படி எதிர்பார்க்க முடியும் என்றும், தமிழகத்தில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை என்றால் அதை வெளிப்படையாக நீதிமன்றத்தில் தெரிவித்து விடலாம், என அதிருப்தி தெரிவித்தனர்.

அதை மறுத்த அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த விஷயத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யவில்லை என்றும், ஆணையத்துக்கு தேவையான பணியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்றும், இணையதள அறிவிப்பின் மூலம் இதுவரை 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும், தெரிவித்தார்.

அறிக்கை தர வேண்டும்: அதையடுத்து நீதிபதிகள், புராதன சின்னங்கள் ஆணையத் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 4 முன்னணி தமிழ் நாளிதழ்கள் மற்றும் 2 ஆங்கில நாளிதழ்களில் பெரிய அளவில் ஒரு வாரத்தில் விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்றும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்க 2 வார கால அவகாசம் வழங்கி, அதன்பிறகு விண்ணப்பங்களை பரிசீலித்து, 3 நபர்களை தேர்வு செய்து சீலிட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், எனவும் உத்தரவிட்டனர்.

அதுவரை தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கோயில்களில் புதிதாக எந்தவொரு கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என தடை விதித்து விசாரணையை மார்ச் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in