

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
சென்னை: மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ரூ. 397 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி்க்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அதை முடித்து வைத்து விட்டதாக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் சுமார் 45 ஆயிரம் மின் மாற்றிகளை கொள்முதல் செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் வலுவான ஆதாரங்கள் இருப்பதால் இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி அதிமுக வழக்கறிஞரணி துணைச் செயலாளரான இ.சரவணன் மற்றும் அறப்போர்இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் டான்ஜெட்கோ தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ஒவ்வொரு மின்மாற்றிக்கும் தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதால் அரசின் பணம் விரயமாகாமல் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதன்மூலம் ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், மின் மாற்றிகள் கொள்முதல் செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.397 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அளிக்கப்பட்டபுகார்கள் முடித்து வைக்கப்பட்டுவிட்டதாக கூறி அறிக்கைதாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், “மின்மாற்றிகளுக்கான கொள்முதல் டெண்டரில் 30 பேர்ஒரே விலையை குறிப்பிட்டுள்ளனர். அதன் மூலமாகத் தான் ரூ.397 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி விரிவான புலன் விசாரணை நடத்த அரசிடம் அனுமதி கோரி கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தது.
அந்த கடிதத்தை 2 ஆண்டுகளாக பரிசீலித்த ஊழல் தடுப்பு ஆணையர், இது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டார். தற்போது இந்த புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி புகாரைமுடித்து வைத்துவிட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுவது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல் உள்ளது” என வாதிட்டார். அவரது வாதம் முடிவடையாததால் இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.