

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக எம்பி-யான தம்பிதுரை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை, தம்பிதுரை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பது இயல்பு தான். கடந்த கால தேர்தல்களில் ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தனித்தனியாக கூட்டணி அமைத்து தான் ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால், கூட்டணி ஆட்சி நடக்கவில்லை. கூட்டு அமைச்சரவையை அமைக்கவில்லை. கூட்டணி என்பது வேறு, ஆட்சியை யார் நடத்துவது என்பது வேறு. 2026-ல் ஆட்சியை அதிமுக தான் நடத்தும். அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது.
“மெகா கூட்டணி அமைப்பேன், திமுகவை வீட்டுக்கு அனுப்புவேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார். நிறைய கட்சிகள் நாங்கள் கூட்டு அமைச்சரவையில் பங்கேற்போம் என்று கூறுகின்றனர்.
அது அவர்களது ஆசையாக இருக்கலாம். அதிமுக தொண்டர்களும் சரி, மக்களும் சரி கூட்டு அமைச்சரவை ஏற்கமாட்டார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் பேசினார்.