தேனி சிறைக்கு வெளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் எங்கே?

சிறைத்துறையின் அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாத அலட்சியம்

தேனி சிறைக்கு வெளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் எங்கே?
Updated on: 
2 min read

தேனி: தேனி சிறைச்சாலையில் துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பணியில் இல்லாதது உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் கூட கடைபிடிக்காததே கைதிகள் தப்பிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேனி அருகே ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி சிறைச்சாலையில் 200 கைதிகளுக்கான இடவசதி மட்டுமே உள்ளது. ஆனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நீடிக்கும் இடப்பற்றாக்குறை காரணமாக, தேனி தேக்கம்பட்டி சிறையில் 334 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சிறைத்துறை விதிப்படி 10 கைதிகளுக்கு ஒரு சிறைக்காவலர் வீதம் சுழற்சி முறையில் ஒரு ஷிப்டில் 33 பேராவது தேனி சிறையில் பணியில் இருந்து இருக்க வேண்டும். ஆனால், ஒரு ஷிப்டில் 10 பேர் மட்டுமே பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 26-ம் தேதி 17 கைதிகள் தப்பிச் சென்றபோது இரவுப் பணியில் வெறும் 9 பேர் மட்டுமே பணியில் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதிகள் தப்பிச்சென்ற 3-வது பிளாக்கில் 92 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு சிலர்தான் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். சிறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை தெரிந்து கொண்டுதான் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்காமல், கைதிகள் தப்பி சென்றதற்கு சிறையில் உள்ள கடைநிலை காவலர்களை மட்டும் பலிகடாவாக்கி ‘சஸ்பெண்ட்’ செய்து இந்த விவகாரத்தை முடிக்க சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி சிறையில் ஒரே நேரத்தில் 17 பேர் தப்பி சென்றதற்கு பாதுகாப்பு குளறுபடிதான் முக்கிய காரணம். வலிப்பு வந்தாக நாடகமாடிய கைதியின் உள்நோக்கம் தெரியாமல் மனிதாபிமான அடிப்படையில் காவலர் கதவை திறந்து இருந்தாலும், முறையான நடைமுறையை தவிர்த்து தன்னிச்சையாக அவர்கள் முடிவெடுத்தது தவறானது.

ஒரே நேரத்தில் 17 கைதிகளும் தப்பிக்க வேண்டும் எனக் கருதி இருக்க மாட்டார்கள். இதில் ஒரிருவர் தப்பிக்கும் முடிவை எடுத்திருக்கலாம். தப்பிச் சென்றால் வழக்கு உள்ளிட்ட பின்விளைவுகளை அறிந்தும் வேறு வழியின்றி ஒரே அறையில் இருந்த சிலர் ஓடும்போது, நாமும் தப்பித்து விடலாம் என அவர்கள் மொத்தமாக ஓடியுள்ளனர். அந்த வகையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவரும் தப்பி இருக்கிறார்.

தேனி சிறைக்குள் மருத்துவமனை இன்றி ஏதாவது அவசரம் என்றால் வெளியிலுள்ள மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கு துணை ஜெயிலரிடம் பேசி ஆலோசித்து, அதற்கான முன்னேற்பாடு செய்து இருந்தால் இந்த சம்பவம் நடப்பதை தவிர்த்து இருக்கலாம்.

பெரும்பாலும் சிறைக்கு வெளியில் தலைமைக்காவலர் தலைமையில் 3 காவலர்கள் துப்பாக்கி ஏந்தி (கார்டு) 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர். இவர்கள் சிறையின் முன் நுழைவு வாயில் உட்பட சிறையை சுற்றிலும் ரோந்து சுற்றி கண்காணிப்பர். ஆனால், ஆட்கள் பற்றாக்குறையால் சிறைக்காவலர்கள், சமீபகாலமாகவே அந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை.

வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸார் பணியில் தொடர்ந்து இல்லாதது போன்றவற்றை கண்காணித்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். ஒருவேளை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பணியில் இருந்திருந்தால் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம். பிரதான கதவின் வெளிப்பக்கம் காவலர்கள் இருந்திருந்தால் கதவு பூட்டப்பட்டிருக்கும். ஆனால், உள்பக்கமாகவே பூட்டப்பட்டிருந்ததால், கைதிகள் எளிதாக திறந்து தப்பியுள்ளனர்.

ஒட்டுமொத்த பாதுகாப்பு நடைமுறைகளையும் சரியாக கடைபிடிக்காதது கைதிகள் தப்பிக்க முக்கிய காரணமாக இருந்தாலும், சிறைக்காவலர்கள் பற்றாக்குறையை போக்க, சிறைத்துறை நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காதது மிக முக்கிய காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தேனி சிறைக்கு வெளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் எங்கே?
வழக்கு ரத்து கோரிய அன்பில் மகேஸ் மனு மீதான விசாரணையை நவ.10-க்கு தள்ளிவைத்தது ஐகோர்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in