

தேர்தல் தோல்விக்கான காரணத்தைத் தேடி மற்ற கட்சிகள் சுயபரிசோதனையில் சுறுசுறுப்பாகிவிட்ட நிலையில், மத்தியில் ஆளும் பாஜக மூச்சுவிடாமல் இருக்கிறது. அந்தளவுக்கு, தமிழகத்தில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்திருக்கிறது அந்தக் கட்சி.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக உறவை உதறித் தள்ளியது அதிமுக. அப்போது அண்ணாமலை தலைமையில் இயங்கிய தமிழக பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது 23 தொகுதிகளில் போட்டியிட்ட தாமரை, 11.24 சதவீத வாக்குகளைப் பெற்றது. 9 தொகுதிகளில் பாஜக-வும் 3 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சிகளும் இரண்டாமிடத்தைப் பிடித்தன. இவை எல்லாமே அண்ணாமலையின் ஆளுமைக்கு கிடைத்த வெகுமதிகளாகவே பார்க்கப்பட்டன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக-வை சமாளிக்க பாஜக-வுக்கு அதிமுக-வின் தயவு தேவைப்பட்டது. அதிமுக-வோ அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை கூட்டணிக்கு வாய்ப்பில்லை என முறுக்கிக் கொண்டது. இதையடுத்து, அதிமுக-வின் டீலை ஏற்றுக் கொண்டு அண்ணாமலையை ஒதுக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியில் உட்காரவைத்தது டெல்லி.
தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே இந்த சம்பிரதாயங்களைச் செய்துமுடித்த அமித் ஷா, “தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி” எனவும் பெருமிதப் பிரகடனம் செய்தார். ஆனால், ஆளுக்கு முந்தி கூட்டணிக்கு அச்சாரம் போட்டாலும் தொகுதிகள் எண்ணிக்கையிலும், விருப்பமான தொகுதிகளைப் பெறுவதிலும் பாஜக கோட்டை விட்டது.
அதனால் பல இடங்களில் திமுக அமைச்சர்களுடன் மல்லுக்கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் தாமரை வேட்பாளர்கள். கட் அண்ட் ரைட்டாகப் பேசி தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெறுவதற்கு நயினார் தெம்பில்லாமல் போனார். எல்லாவற்றுக்கும் மேலாக, அண்ணாமலைக்கே தொகுதி இல்லாத நிலையை பாஜக-வும் சேர்ந்தே உருவாக்கியது. இதனால், பிடிப்பில்லாமலேயே பிரச்சாரக் களத்தில் நின்றார் அண்ணாமலை.
இப்படி, முதல் கோணல் முற்றும் கோணலாகவே அதிமுக - பாஜக கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் நகர்ந்ததால் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 2.97 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றது. வெறும் 976 வாக்குகள் வித்தியாசத்தில் ஊட்டியில் மட்டும் பார்டரில் பாஸானது. இந்தப் படுதோல்விக்கான காரணத்தை எந்தப் புள்ளியில் இருந்து ஆராய்வது என்று தெரியாமல் டெல்லி பாஜக தலைவர்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
இதனிடையே, அண்ணாமலையை மாற்றிய விவகாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் அமித் ஷா தரப்புக்கும் அண்மையில் சூடான விவாதங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழக பாஜக தலைகளிடம் தனித்தனியே அமித் ஷா கடிதம் கேட்டிருப்பதாகவும் ஒரு தகவல்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர், “திராவிடக் கட்சிகளே மிரளும் அளவுக்கு தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை பேசவைத்தார் அண்ணாமலை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சிலரின் பேச்சைக்கேட்டு அவரை தலைவர் பதவியில் இருந்து தூக்கினார்கள். அப்போதே கட்சிக்கு சரிவு ஆரம்பமாகி விட்டது. ஆனாலும் டெல்லி தலைவர்கள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதிமுக-வும் பழனிசாமியும் பாஜக-வை ஜெயிக்கவைத்து விடுவார்கள் என நம்பியதே இதற்குக் காரணம். ஆனால், நடந்தது என்ன... மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் பாஜக இரண்டாமிடம் பிடித்தது.
அப்போது மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக-வுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்குமான வாக்கு வித்தியாசமே சுமார் மூவாயிரம் தான். அந்தக் கணக்கில் தான் இந்தத் தேர்தலில் பாஜக மதுரை தெற்கில் போட்டிபோட்டது. ஆனால், இம்முறை கூட்டணியில் அதிமுக இருந்தும் அங்கே பாஜக சுமார் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது? அதிமுக-வை விடக்கூடாது என பாஜக-வினரும் பாஜக-வை விடக்கூடாது என அதிமுக-வினரும் ‘நண்டு’ வேலை செய்ததால் தான் இந்தக் கூத்தெல்லாம் நடந்திருக்கிறது.
மொத்தத்தில், பழனிசாமியை பிடிக்காத பாஜக-வினரும் அண்ணாமலையை பிடிக்காத அதிமுக-வினரும் விசிலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். பாஜக ஆதரவில் 3 டிவி சேனல்கள் இருக்கின்றன. அதையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பாஜக தலைமை தவறிவிட்டது. விளைவு, அந்தச் சேனல்களை எல்லாம் திமுக தனது கட்டுப்பாட்டுக்குள் வளைத்துக் கொண்டது.
2011-ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக-வை மிரட்டியே 63 சீட்களை வாங்கியது. ஆனால் இம்முறை, புலி வருது கதையாக மிரட்டிக் கொண்டே இருந்த பாஜக-வுக்கு கிடைத்தது என்னவோ 27 தொகுதிகள். அதிலும் குறிப்பாக, அண்ணாமலைக்கு தொகுதியே இல்லாதபடி தந்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள். இதற்காகவா இத்தனை பில்டப் கொடுத்தார்கள்? அதுபோகட்டும், ஆரம்பத்திலிருந்தே திமுக-வுடன் முரண்டுபிடித்து வந்த காங்கிரஸ் 5 தொகுதிகளை வெல்லும் போது பாஜக 10 தொகுதிகளையாவது எடுத்திருக்க வேண்டாமா?
மொத்தத்தில், அதிமுக-வின் பேச்சைக் கேட்டு அண்ணாமலையைக் கைவிட்டவர்கள், இன்னமும் தவறு செய்கிறார்கள். விஜய் பதவியேற்பு விழாவில் தமிழிசையும் நயினார் நாகேந்திரனும் யாரைக் கேட்டு பங்கேற்றார்கள்... பதவியேற்றதும் எதிர்க்கட்சி தலைவர்களைத் தேடிப் போய்ச் சந்தித்த விஜய், உங்கள் வீட்டுக்கு வந்தாரா? பிறகேன் இந்த அவசரம்?” என்றார்கள்.
ஓபிஎஸ்ஸையும் தினகரனையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர சில பல பஞ்சாயத்துகளை பேசிக் களைத்த டெல்லி பாஜக, இப்போது, அதிமுக-வுக்குள் நடக்கும் களேபரங்களை கண்டும் காணாதது போல் இருக்கிறது. “மே 4-ம் தேதிக்குப் பிறகு பேசுவேன்” என்று சொன்ன அண்ணாமலையும் தேர்தல் முடிவுகள் குறித்து ஏதும் பேசாமலே இருக்கிறார்.
பொது நிகழ்ச்சிகளுக்கும் யோசித்தே அவர் ஒப்புதல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், “தமிழக பாஜக-வை இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் சொல்லி இருப்பது மீண்டும் அண்ணாமலை வரலாம் என்கிற ஆவலை அவரது விசுவாசிகள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.