

மதுரை: தங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க திமுகவும் அதிமுகவும் பாஜகவுடன் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் கூறினார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெகவினர் மற்றும் பொதுமக்கள் 10-க்கும் மேற்பட்டோர் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுப்பதால் நிகழ்ச்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இடையூறு இருந்தால், அதை முறைப்படுத்திக்கொள்வோம்.
மதுரை மாநகராட்சியில் தனியார் குப்பை அள்ளும் நிறுவனம், கடந்த மாதத்தில் குப்பைக்குப் பதிலாக மண்ணை அள்ளியதாக ஒரு வழக்கில் பிடிபட்டனர். இது திரும்பவும் நடந்துள்ளது. இதற்குக் காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் புகார் அளித்துள்ளார். இந்த முறைகேடு பல மாதங்களாக நடந்துள்ளது. ஆயிரம் டன்னுக்கு மேல் குப்பைக்குப் பதிலாக மண்ணை அள்ளிச் சென்று கொட்டி வந்துள்ளனர்.
இதுதொடர்பாக தற்போது 2 லாரிகள் பிடிபட்டுள்ளன. இந்த தனியார் நிறுவனத்துக்குத்தான் கடந்த திமுக ஆட்சியில் அனைத்து மாநகராட்சிகளிலும் ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குதிரை பேரம், ஒட்டக பேரம் குறித்தெல்லாம் திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் தெரியும். பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் சேர்ந்து என்ன செய்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தெரியும். அவர் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் சிரமமாகிவிடும்.
திமுக தலைவரும், அதிமுக பொதுச்செயலாளரும் அவர்களின் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தங்கள் கட்சிகளை பாஜகவில் இணைத்துக்கொண்டு, அமைச்சர் பதவிகளை வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதை நோக்கித்தான் அந்த 2 கட்சிகளும் சென்று கொண்டிருக்கின்றன. இதைத் தெரிந்துகொண்டுதான் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.