

சென்னை: உயர் கல்வித் துறை செயலராக இருந்த சங்கர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் நிலச் சீர்திருத்தத் துறை ஆணையர் எஸ்.விஜயகுமார், இப்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலராகவும், தொழில் துறை செயலர் வி.அருண் ராய் இப்போது உயர் கல்வித் துறை செயலராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர் என்.சுப்பையன் இப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலராகவும், முன்னாள் முதல்வரின் தனிச் செயலராக இருந்த பி.உமாநாத் இப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், சிறப்பு திட்டங்கள் துறை செயலர் ஆர்.ஜெயா இப்போது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராகவும், சேலம் மாவட்ட ஆட்சியர் ஏ.அருண் தம்புராஜ் இப்போது செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே.இளம்பகவத், சேலம் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநராக ஆர்.பிருந்தா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வரின் தனிச் செயலராக இருந்த எம்.எஸ்.சண்முகம் இப்போது சுற்றுலாத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளனர். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநராகவும் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.