தமிழகத்தில் முதல் முறையாக பரனூர் சுங்கச் சாவடியில் வாகனங்களை நிறுத்தா வசூல் முறை அறிமுகம்

பரனூர் சுங்கச் சாவடி | கோப்புப் படம்

பரனூர் சுங்கச் சாவடி | கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை சென்னை அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘பல வழித்தட தடையற்ற பயணம் (எம்எல்எப்எப்) என்ற மின்னணு சுங்க வசூல் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தி வருகிறது.

குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலை 48ல் உள்ள சூரத் - பரூச் பிரிவில் உள்ள சோரயாசி சுங்கச்சாவடி, டெல்லி - என்சிஆரில் உள்ள முண்ட்கா - பக்கர்வாலா சுங்கச்சாவடி, ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை 48ல் உள்ள ஷாஜஹான்பூர், தவுலத்பூர், மனோகர்புரா சுங்கச்சாவடி, ஹரியானாவின் தேசிய நெடுஞ்சாலை 44ல் உள்ள பானிபட் - ஜலந்தர் பிரிவில் உள்ள கரவுண்டா சுங்கச்சாவடி ஆகியவற்றில் இத்தகைய மின்னணு சுங்க வசூல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை 179பி தாம்பரம் - திண்டிவனம் பிரிவில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மின்னணு சுங்க வசூல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏன்பிஆர் எனப்படும் தானியங்கி வாகன எண் பலகை அங்கீகாரம், ஃபாஸ்டேக் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இங்கு சுங்க வசூல் மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம், இனி இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்ல முடியும். ‘இது எரிபொருள் மற்றும் நேரம் மிச்சப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலையும் குறைக்கிறது. மேலும், சுங்கச் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையானதாக, செலவு குறைந்ததாக மாற்றுகிறது.

தடையற்ற, சுமூகமான பயணத்தை ஊக்குவிப்பதன் மூலம் பயணத்தை எளிமையாக்குகிறது. நேரடி சுங்கச்சாவடிகளை அமைப்பதில் உள்ள செலவுகளைக் குறைப்பதன் மூலமும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலமும் சுங்கச்சாவடி அமைப்பை வலுப்படுத்த இது உதவியுள்ளது’ என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>பரனூர் சுங்கச் சாவடி | கோப்புப் படம்</p></div>
‘ஃப்ளை துபாய்’ பைலட் ஸ்மித் மச்சாருக்கு அரசு விருது: குஜராத் முதல்வர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in