

சென்னை: ‘‘தூத்துக்குடியில் சூப்பர் கிரிட்டிக்கல் அனல்மின் நிலையம் ரூ.20,800 கோடியில் நிறுவப்படும். காஞ்சியில் செமி கண்டக்டர் ஆலை அமைக்கப்படும்’’ என்பது உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளைச் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது தொடர்பாக முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் மின் நுகர்வை கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் வினியோகத் துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மின்கட்டமைப்பு அவசியமாகிறது.
தற்போது மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சென்னை போன்ற முக்கிய மின் நுகர்வு மையங்களுக்குத் திறம்பட கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பை மேம்படுத்த வேண்டும்.
இதற்காக, அரசு தொலைநோக்குடன் ரூ.33,066 கோடியில் ‘தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இதன்கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்.
தமிழகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து, காற்றாலை, சூரிய மின்சாரம் மற்றும் மின்கல சேமிப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆற்றல் ஆதாரங்கள் சமச்சீராகக் கிடைப்பதில்லை.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இருந்து பெறப்படும் உபரி மின்சாரத்தைப் பேட்டரிகளில் சேமித்து வைத்து இரவு நேரங்களில் தேவைக்கேற்ப பயன்படுத்தும் தொழில்நுட்பம் தற்போது உள்ளது. எனினும், இந்த கட்டமைப்பு அனைத்து நேரங்களிலும் உள்ள மின்தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது.
எனவே, மின்தேவை அதிகமாக இருக்கும் காலங்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்க அனல்மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிய அனல் மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்குப் பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து அதிகரித்து வரும் மின் சுமையைத் திறம்பட கையாள்வதற்கும், மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், மின் உற்பத்தித் துறையில் முதலீடுகளை மேற்கொள்வது முக்கியமானதாகும்.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் தமிழகத்தின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு தற்போது தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன் 1,050 மெகாவாட் ஆகும். இந்த அலகுகள் 1979-ம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.
நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்குப் பொருந்தக் கூடிய சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப தற்போதுள்ள அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள 5 அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைத்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில், தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன், மொத்தம் 1,600 மெகாவாட் திறன் கொண்ட சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின்நிலையம் ரூ.20,800 கோடியில் நிறுவப்படும்.
மின் பகிர்மானம்: சென்னை மாநகரின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய வலுவான மின் பகிர்மானக் கட்டமைப்பு அவசியம். சென்னையில் பருவ மழைக்காலங்களில் வெள்ளம் தொடர்பாக ஏற்படும் மின்தடைகளையும், கோடை காலங்களில் அதிக மின் தேவை காரணமாக ஏற்படும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 36 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின் கடத்திகள் உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் ரூ.1,762 கோடியில் மேற்கொள்ளப்படும்.
மேலும், தமிழகத்தில் செமி கண்டக்டர் துறையில் அதிகளவு முதலீட்டை ஈர்க்கவும், இத்துறையில் நமது மாநிலத்தின் பங்கை கணிசமான அளவு உயர்த்தவும், காஞ்சிபுரம், மதுரமங்கலத்தில் செமி கண்டக்டர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி பூங்கா ரூ.175 கோடியில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
இதில் செமி கண்டக்டர் துறையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த ஆய்வு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இத்துறையில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், 5,000 நபர்களுக்குநேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதுதவிர டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்கும் நோக்கத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.400 கோடியில் ஏற்படுத்தப்படும். இதன்மூலம், கோயம்புத்தூரில் நிதி மற்றும் நிதிநுட்பத்துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகை செய்யப்படும்.
தமிழகத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மாவட்டப் பகுதிகளில் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. எனவே, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் திருச்சி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.