

மயில்சாமி அண்ணாதுரை
புதுக்கோட்டை: தமிழகத்தின் புதிய பாடப் புத்தகங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவரும், தமிழ்நாடு புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்தில், முதல் 3 வகுப்புகளுக்கான முதலாம் பருவப் புத்தகங்கள் சிறப்பாக வெளிவந்துள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலுமே எழுத, வாசிக்க, பேச, அடிப்படை கணிதத்தை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
வகுப்பறைகள் கரும்பலகையை தாண்டி, ஸ்மார்ட் வகுப்பறைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், குழந்தைகள் விளையாட்டாகவே கற்றுக்கொள்ள முடியும். புத்தகத்தில் உள்ள பாடங்களை ஸ்மார்ட்போர்டு மூலம் கதையாக, ஓவியமாக, உரையாடல்கள் வழியாக எளிதில் கற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. தற்போது இது முதல் 3 வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அடுத்தடுத்த வகுப்புகளுக்குரிய புதிய புத்தகங்களுக்கான வரையறைகளை விரைவில் வெளியிட உள்ளோம். அதில் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் புத்தகங்கள் உருவாக்கப்படும். சர்வதேச அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளையும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்க உள்ளோம்.
எனவே, புத்தகங்களை எளிமைப்படுத்திக் கொடுப்பது மற்றும் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகளை எளிமையாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. தமிழக புதிய பாடப்புத்தகங்கள் உலகத்தரம் வாய்ந்த அளவில் இருக்கப்போகின்றன. சர்வதேச அளவிலான, அடுத்த தலைமுறைக்கு தேவையானவற்றைப் புத்தகங்களில் கொடுக்கப் போகிறோம். கற்றலை இனிமையாக்க முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.