

சென்னை: விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக ஏற்கெனவே உள்ள விதிகளில் திருத்தங்களைச் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விளை நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றி கட்டுமானப் பணிகள் அல்லது பிற பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒற்றை சாளர போர்ட்டல்: இதற்காக ஆன்லைன் வாயிலாக ஒற்றை சாளர போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் சுய சான்றிட்ட நிலத்தின் கிரயம் அல்லது குத்தகை பத்திர நகல், நிலத்தின் பட்டா நகல், நிலத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வழியை காட்டும் வரைபடம், முறையான அளவீடுகளுடன் கூடிய நில வரைபடம், மனைப்பிரிவு, உட்பிரிவு செய்த வரைபடம் அல்லது கட்டிட வரைபடம், நிலத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள அனைத்து கட்டிடங்களின் வரைபடம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், புறம்போக்கு, அரசு மற்றும் இதர நிலங்கள் இதில் இணைக்கப்படவில்லை என்பதற்கான விண்ணப்பதாரரின் ஆன்லைன் பிரமாண பத்திரம், நிலத்தின் சிட்டா நகல், நடப்பாண்டு உள்ளிட்ட 3 ஆண்டுகளுக்கான அடங்கல் சான்று ஆகியவற்றையும் சுய சான்றிட்டு இணைக்க வேண்டும்.
தடையில்லா சான்றிதழ்: ஈர நிலமாக இருப்பின், வருவாய் கோட்டாட்சியர், வேளாண்மை துறையின் இணை இயக்குநர், நீர்வளத் துறை செயற்பொறியாளர் ஆகிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.