

சென்னை: வங்கக்கடலில் நவ.13-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவ.13-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும்.
மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல்
மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (நவ.11-ம் தேதி) சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருது நகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.