புதுச்சேரியில் வாக்கைப் பிரிக்கும் புதிய கட்சிகள்: களத்தில் என்டிஏ, இண்டியா கூட்டணி மும்முரம்

புதுச்சேரியில் வாக்கைப் பிரிக்கும் புதிய கட்சிகள்: களத்தில் என்டிஏ, இண்டியா கூட்டணி மும்முரம்
Updated on
2 min read

புதுச்சேரி: மத்​தி​யில் நீண்ட காலம் காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்​த​தால் புதுச்​சேரி​யிலும் அக்​கட்​சியே ஆட்​சியை பிடித்​தது. இந்த நிலை 2011-ம் ஆண்​டில் மாறியது. காங்​கிரஸில் இருந்து பிரிந்து என்​.ஆர்​.​காங்​கிரஸை தொடங்​கி​னார் ரங்​க​சாமி. அது முதல் புதுச்​சேரிக்​கான சொந்த மண்​ணில் உரு​வான ஒரு கட்​சி​யின் செல்​வாக்கு உயர்ந்​தது.

அப்​போது என்​.ஆர்​.​காங்​கிரஸை தொடங்​கிய ரங்​க​சாமி, அதி​முக​வுடன்​கூட்​டணி அமைத்து வெற்றி பெற்​று, அதன்​பின் தனித்து ஆட்சி அமைத்​தார். கட்சி தொடங்கி ஒன்​றரை மாதத்​தில் அவர் ஆட்​சி​யைப் பிடித்​தது பலரின்​புரு​வத்தை உயர்த்​தி​யது. கடந்த 2016 தேர்​தலில் கூட்டணி இன்றி தனித்து நின்ற போது ரங்​க​சாமி​யால் 8 தொகு​தி​யில் மட்டுமே வெற்றி பெற்​று, எதிர்க்​கட்சி அந்​தஸ்​தையே பெற முடிந்​தது.

கடந்த 2021-ல் பாஜக, அதி​முக​வுடன் கூட்​டணி அமைத்து ரங்​க​சாமி மீண்​டும் ஆட்​சியை பிடித்​தார். அந்த தேர்​தலில் எப்​போதும் இல்​லாத வகை​யில் பலரும் பாஜக, என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சிகளுக்​குத் தாவிய​தால் பெரும் பின்​னடைவை காங்​கிரஸ் சந்​தித்​தது. அப்​போது காங்​கிரஸ் 2 எம்​எல்​ஏக்​களை மட்​டுமே பெற்​றது. இதிலிருந்து மீள வேண்​டும் என்று காங்​கிரஸும், ஆட்​சி​யைத் தக்க வைக்க வேண்​டும் என்று என்​.ஆர்​.​காங்​கிரஸும் தற்​போதைய தேர்​தல் களத்​தில் தீவிர​மாக மோதுகின்​றன. கூடவே தங்​களை மென்​மேலும் வளர்த்​தெடுக்க வேண்​டிய நிர்​பந்​தத்​தில் பாஜக தீவிரம் காட்டி வரு​கிறது.

என்​ஆர்​.​காங்​கிரஸுடன் அதன் பழைய கூட்​டாளி​களான பாஜக, அதி​முக இணைந்​துள்​ளது. புதி​தாக லட்​சிய ஜனநாயக கட்​சி​யும் கைகோர்த்​துள்​ளது. மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் 16, பாஜக 10 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. அதி​முக, லஜக முறையே இரு தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன. “2029 வரை மத்​தி​யில் பாஜக ஆட்​சி​தான் நீடிக்​கும்.

இந்​தச் சூழலில் மத்​தி​யிலும் மாநிலத்​தி​லும் ஒரே கூட்​டணி ஆட்​சி​யில் இருப்​பதே வளர்ச்​சிக்கு வழி வகுக்​கும்” என்று ரங்​க​சாமி பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். அதி​முக​வும், லட்​சிய ஜனநாயக் கட்​சி​யும் தங்​கள் தொகு​தி​களில் வெற்றி பெற தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றன. அதே​நேரத்​தில் இண்​டியா கூட்​ட​ணி​யில் தொகுதி பங்​கீடே பல்​வேறு சிக்​கல்​களுக்கு இடை​யில் முடிந்து ஒரு​வித அதிருப்​தி​யுடனே களத்​தில் இறங்​கி​யிருக்​கின்​றனர்.

மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களில் 16 தொகு​தி​கள் காங்​கிரஸுக்கு ஒதுக்​கப்​பட்​டது. 13 தொகு​தி​களில் திமுக, ஒரு தொகு​தி​யில் விசிக போட்​டி​யிடு​கிறது. இக்​கூட்​ட​ணிக்​காக தொடக்​கத்​தில் உரத்து குரல் கொடுத்து வந்த இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் தனித்து போட்​டி​யிடு​கின்​றன.

கூட்​ட​ணி​யில் ஒப்​பந்​தம் செய்து கொண்​டபடி பிர​தான கட்​சிகளான காங்​கிரஸ் நடந்து கொள்​ள​வில்​லை. இதனால் காங்​கிரஸ் - திமுக இடையே மோதல் ஏற்​பட்​டு, தங்​களுக்​கான 16 தொகு​தி​களைத் தாண்டி திமுக போட்​டி​யிடும் 5 தொகு​தி​களில் காங்​கிரஸ் போட்டி வேட்​பாளர்​கள் கை சின்​னத்​துடன் களத்​தில் உள்​ளனர்.

ஒரே தொகு​திக்​குள் ஒரு பக்​கம் உதய சூரியன் சின்​னத்​துக்கு வாக்கு கேட்​பதும், மறு​புறம் கை சின்​னத்​துக்கு வாக்கு கேட்​பதும் என்று இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சி​யினர் புதுவை மக்​களை திகைப்​பில் ஆழ்த்தி வரு​கின்​றனர். விசிக போட்​டி​யிடும் ஒரு தொகு​தி​யிலும் காங்​கிரஸ் போட்டி வேட்​பாளர் வலம் வந்து வாக்கு சேகரிக்​கிறார். இண்​டியா கூட்​ட​ணி​யின் இந்த சிதறல் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு சாதக​மாக அமைந்​திருக்​கிறது.

கடந்த இரு நாட்​களுக்கு முன் புதுச்​சேரிக்கு வந்த காங்​கிரஸ் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் முகுல் வாஸ்​னிக், விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சியை மட்​டும் சமா​தானப்​படுத்​தி, அவர்​கள் கூடு​தலாக போட்​டி​யிட்ட 3 தொகு​தி​களில் காங்​கிரஸுக்கு ஆதரவு தரு​மாறு கூறி​யிருக்​கிறார். அதன்​படி அக்​கட்​சி​யினர், தங்​களுக்கு என்று ஒதுக்​கப்​பட்​டுள்ள உழவர்​கரை தொகு​தி​யில் மட்​டும் பிரச்​சா​ரம் செய்து வரு​கின்​றனர். மற்ற 3 தொகு​தி​களில் காங்​கிரஸுக்கு எதி​ரான பிரச்​சா​ரத்தை நிறுத்தி விட்​டனர்.

இதனிடையே புது​வை​யில் தவெக​வும், நாம் தமிழர் கட்​சி​யும் களத்​தில் உள்​ளன. தமிழக வெற்​றிக் கழகம் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களில் 28 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. அவர்​களு​டன் கூட்​ட​ணி​யில் உள்ள நேயம் மக்​கள் கழகம் இரு தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. நாம் தமிழர் கட்சி 28 தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிடு​கிறது. இவர்​களுக்​கான தனித்த வாக்​கு​களும் உள்​ளன. தமிழகத்​தைப் போல புது​வை​யிலும் தவெக​வுக்கு இளம் வாக்​காளர்​களின் செல்​வாக்கு உள்​ளது.

யூனியன் பிரதேச​மான புது​வை​யில் 20 ஓட்டு வித்​தி​யாசத்​தில் வேட்​பாளர்​கள் வெற்றி பெற்ற சரித்​திர நிகழ்​வெல்​லாம் அரங்​கேறி​யிருக்​கிறது. சிறிய அளவி​லான வாக்​கு​கள் வெற்றி தோல்​வியை மாற்றி விடும். அந்​தச் சூழலில் தவெக, நாதக வாக்​கு​கள் முக்​கி​யத்​து​வம் பெறுகின்​றன. இதை கணக்​கில் வைத்தே தவெக​வில் தற்​போதைய எம்​எல்​ஏக்​கள், முன்​னாள் எம்​எல்​ஏக்​கள், தொகுதி பிரபலங்​கள் சீட் பெற்று போட்​டி​யிடு​கின்​றனர். அவர்​களும் அந்த தொகு​தி​யில் வெற்றி பெற தீவிர முயற்சி எடுத்து வரு​கின்​றனர்.

மங்​கலம், தட்​டாஞ்​சாவடி என இரு தொகு​தி​களில் போட்​டி​யிடும் முதல்​வர் ரங்​க​சாமி தட்​டாஞ்​சாவடி​யில் அதிக கவனம் செலுத்​துகிறார். மாநில காங்​கிரஸ் தலை​வர் வைத்​திலிங்​க​மும் தட்​டாஞ்​சாவடி தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார். இவர்​கள் இரு​வரும் பிற தொகு​தி​களின் பிரச்​சா​ரத்​துக்கு சென்​றாலும், தங்​கள் தொகு​தி​களில் அதிக கவனம் செலுத்​துகின்​றனர்.

அமைச்​சர் நமச்​சி​வா​யம், பாஜக மாநிலத் தலை​வர் வி.பி.​ராமலிங்​கம், திமுக மாநில அமைப்​பாளர் சிவா ஆகியோ​ரும் தங்​கள் தொகு​தி​களுக்கே முக்​கி​யத்​து​வம் தரு​கின்​றனர். மொத்​தத்​தில் முக்​கி​யத் தலை​வர்​கள் தங்​கள் தொகு​தி​களி​லேயே முடங்​கிப் போயிருக்​கின்​றனர். இதனால்​ பிரச்​சார களம்​ சூடுபிடித்​துள்​ளது.

புதுச்சேரியில் வாக்கைப் பிரிக்கும் புதிய கட்சிகள்: களத்தில் என்டிஏ, இண்டியா கூட்டணி மும்முரம்
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in