

பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்
சென்னை: சென்னைக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் களம் இப்போதே உச்சகட்டப் பிரச்சாரத்தால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்ற அவர், அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு மீண்டும் சென்னை திரும்பிய அவரை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது சில முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் கள நிலவரம் குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அடுத்தகட்டப் பிரச்சாரத்தை பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்துவதா அல்லது மக்களுடன் நேரடியாக உரையாடும் வகையில் 'ரோடு ஷோ' ஆக நடத்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் ஏப்.15-ம் தேதியன்று கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. பாஜக போட்டியிடும் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் வியூகங்கள் குறித்தும் அப்போது விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை,தமிழிசை உள்பட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் பிரதமர் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. பின்னர், ஆலோசனைகளை முடித்துக் கொண்டு, இன்று பிற்பகலில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக தேர்தல் களத்தில் பிரதமரின் இந்த அடுத்தடுத்த நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.