

சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1 முதல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துஉள்ளது.
இதுதொடர்பாக நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் தனித்தனியே வெளியிட்டுள்ள இரு அரசாணைகளில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2026 அமல்படுத்தப்பட உள்ளது.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் வரும் ஜூலை 1 முதல் 2031-ம் ஆண்டு ஜூன் 30-ம் வரை 5 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் (வாழ்க்கை துணை உள்பட) மற்றும் குடும்ப ஓய்வூதியதார்களும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.7.50 லட்சம் வரை பணமில்லா முறையில் மருத்துவ உதவி பெறலாம்.
மேலும் குறிப்பிட்ட 46 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தில் 2,992 சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 1535 தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உ்ள்ளிட்ட பணியாளர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் பிரீமியத்தை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் (வாழ்க்கை துணை உள்பட), தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட (டேப்ஸ்) ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அந்த அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது.