

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (நவ.13) உருவாகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (நவ.13) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவ.13) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவ.15-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும்.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.13), நாளை மறுதினம் (நவ.14) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (நவ.13), நாளை மறுதினம் (நவ.14) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மழைப் பொழிவு:
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடில் 4 செ.மீ, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3 செ.மீ, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை, தக்கலை, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, காரைக்கால் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.