

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். | படம்: ம.பிரபு |
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.வஸ்தவா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, 55-வது தலைமை நீதிபதியாக, சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வந்த இவர் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் தர்மாதிகாரி பதவியேற்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. புதிய தலைமை நீதிபதியாக தர்மாதிகாரியை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்த உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வாசித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க, சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல்.
சுந்தரேசன், பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி.கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர்.கமலநாதன், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் என்.ரேவதி, லா அசோசியேஷன் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், சிறப்பு வழக்கறிஞர் மூ.பழனிமுத்து, சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, அமைச்சர் ரகுபதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் எம்.பி., டிஜிபி வெங்கடராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் தலைமை நீதிபதி தர்மாதிகாரியின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
மாலையில் பொறுப்பேற்பு
பின்னர், உயர் நீதிமன்ற கலையரங்கில் மாலையில் நடந்த நிகழ்வில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வரவேற்புரை நிகழ்த்த, புதிய தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்விலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதித்துறை அதிகாரிகள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
விருப்பு, வெறுப்பின்றி கடமையாற்றுவேன் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி உறுதி
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரிக்கு பாரம்பரிய வழக்கப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்ற விழாவில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து ஏற்புரையாற்றிய நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, “நாட்டிலேயே பழமையான, பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்று இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த மரபுகளை பாதுகாத்து வலுப்படுத்த விருப்பு, வெறுப்பில்லாமல் எனது கடமையை ஆற்றுவேன். வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் ஒரு வண்டியின் இரு சக்கரங்கள் என்றாலும், வழக்கறிஞர்களை நான் பங்குதாரர்களாகவே காண்கிறேன்.
வழக்கு விசாரணையை தேவையில்லாமல் தள்ளிவைக்கும்படி கோரக் கூடாது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீதிபரிபாலனம் சிறக்க தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நீதித்துறையை நவீனப்படுத்த வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்” என்றார்.