

சென்னை: தண்டையார்பேட்டையில் ரூ.2.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் விஜய் தமிழன் பார்த்திபன், மரியவில்சன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், 38-வது வார்டு, தண்டையார்பேட்டை ஐஓசி-எண்ணூர் நெடுஞ்சாலையில் ராதா
கிருஷ்ணன் நகர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.2.50 கோடியில் 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், நிதியமைச்சர் மரியவில்சன் ஆகியோர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.
இப்பேருந்து நிலையத்தில், குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை, காத்திருப்போர் அறை, பேருந்து நேரக்காப்பாளர் அறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிவறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இப்பேருந்து நிலையத்திலிருந்து 12 பேருந்துகள் மூலம் 122 புறப்பாடுகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் இப்பகுதியில் வசிக்கும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன், தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் ஏ.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.