சேவல் சண்டையை முறைப்படுத்தவே சுற்றறிக்கை; தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் அறிக்கை

சேவல் சண்டையை முறைப்படுத்தவே சுற்றறிக்கை; தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் அறிக்கை
Updated on
1 min read

சென்னை: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் பாரம்பரியமாக நடத்தப்படும் சேவல் சண்டை போட்டிக்கு அனுமதி கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

அதில், ‘‘போலீஸார் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் சேவல் சண்டைகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்ட நோக்கம் எதுவும் இல்லை.

அதேபோல் சேவல்கள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. எனவே சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை வழக்கம்போல நடத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் சேவல் சண்டையை முறைப்படுத்தவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.

சேவல் சண்டைக்கு தடை விதித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிஜிபியின் சுற்றறிக்கை குறித்து போலீஸாருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், ‘‘சேவல் சண்டை போட்டிகளுக்கு போலீஸார் எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை என்பதால் மனுதாரர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறையினரை அணுகி மனு அளிக்கலாம். அந்த மனுவை போலீஸார் பரிசீலித்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கலாம்’’ என உத்தரவிட்டுள்ளார்.

சேவல் சண்டையை முறைப்படுத்தவே சுற்றறிக்கை; தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் அறிக்கை
6 மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் இணைப்பு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in