

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு உள்ளூர் மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் பிராந்தி, விஸ்கி, ஜின், வோட்கா ஆகியவற்றுடன் 17 வகையான பீர் ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பீர் அருந்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்கும் வகையில் புதிய முடிவை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ளது.
அதன்படி, பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் 4 புதிய பீர் வகைகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரக பீர்கள் அனைத்தும் தீபாவளிபண்டிகையை ஒட்டி விற்பனைக்கு கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சில்வர் பிரீமியம் மால்ட் லாகர் பீர் (கர்நாடகா - யுனைடெட் புரூவரீஸ் நிறுவனம்), சிம்பா ரோர் சீரிஸ் ஸ்ட்ராங் பிரீமியம் பீர் (சத்தீஸ்கர் - சோனா பெவரேஜஸ் நிறுவனம்), மவுண்ட் எவரெஸ்ட் புரூவரீஸ் நிறுவனத்தின் லீ மவுண்ட் பிரீமியம் ஸ்ட்ராங் பீர், ஸ்டாக் ஸ்ட்ராங் பீர் விற்பனைக்கு வர உள்ளன.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: அண்மையில் நடைபெற்ற டாஸ்மாக் நிறுவன போர்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதிய ரக பீர்களை அறிமுகப்படுத்த உள்ளோம். முதற்கட்டவிலையாக ரூ.250 நிர்ணயத்துள்ளோம். வழக்கமான டாஸ்மாக் கடைகள் மற்றும் எலைட் மதுபானக் கடை
கள் ஆகிய இரண்டிலுமே புதிய ரக பீர்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவழி வகை செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வருவதற்கு முன்பு, டாஸ்மாக் நிர்வாகக் குழுவின் இறுதி முடிவினை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, கலால் துறை மூலம் பதிவு முத்திரைவழங்கப்பட்டு விற்பனை தொடங்க திட்டமிட்டுள் ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.