

சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக வடசென்னைப் பகுதிகளில் தீவிரமடைந்த மழை பாரிமுனை பகுதியில் குறுகிய நேரத்திற்குள் 17.5 சென்டிமீட்டர் அளவுக்கு மிகக் கனமழை பதிவாகியுள்ளது.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. முன்னதாக நுங்கம்பாக்கம் பகுதியில் 7.5 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.
சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வடதமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், அடுத்த சில மணி நேரங்களுக்குச் சென்னையில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நள்ளிரவு 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.