

சென்னை: புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள், 24 பெட்டிகளுடன் தயாரிக்கப்படும் என்று ஐசிஎஃப் பொதுமேலாளர் மணீஷ் அகர்வால் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடந்த நிதியாண்டில் 3,405 ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.2 சதவீதம் அதிகம். இதுபோல, 80 ஆயிரமாவது பயணிகள் ரயில் பெட்டியை தயாரித்தும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்.
தற்போது 16 பெட்டிகளுடன் தூங்கும்வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 24 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயிலின் வடிவமைப்பு தயாராக உள்ளது விரைவில் தயாரிப்பு பணி தொடங்க உள்ளது. குறைந்த கட்டணத்தில் வசதியான பயணத்துக்காக ஏசி பெட்டி, பொது பெட்டி மற்றும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் அடங்கிய புதிய அம்ரித் பாரத் ரயிலையும் தயாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.