

கோவை: தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கான பல்வேறு அம்சங்கள் உள்ளன என கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசினார்.
கோவையில் நேற்று நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவில் உள்ள கல்லூரிகள் அனைத்தும் கடைபிடிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை கொடுக்க முடியும். தேசிய கல்விக் கொள்கை 2020-ல், மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கான பல்வேறு அம்சங்கள் உள்ளன. 1947-ம் ஆண்டி
லேயே காலனி முறையிலான கல்வி முறையை மாற்றி அமைக்க குழு அமைத்து நமக்கான கல்வி முறையை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் அதை 2020-ம் ஆண்டில் தான் செய்ய முடிந்தது.
முந்தைய கல்வித் திட்டம் வெறும் மனப்பாடம் செய்யும் முறையை அடிப்படையாகக் கொண்டு, வேலை தேடுபவர்களையும் அடிமைகளையும் தான் உருவாக்கியது. நமது தேசத்தின் பாரம்பரியமிக்க கல்வி முறையில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
அதை பிற நாடுகள் கூட கடைபிடித்துள்ளன. குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையில் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும்.
நமது தேசத்தின் பாரம்பரியமிக்க கல்வி முறையும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணைந்து மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட வேண்டும். அதுவே சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். வெறும் வேலை வாய்ப்பை பெறுவது மட்டுமே கல்வியின் அடிப்படையாக இருக்கக் கூடாது. வேலை கொடுப்பவர்களாகவும் இளம் தலைமுறையினர்மாறவேண்டும்.
புதிய கல்வித் திட்டத்தில் இதற்கான இன்குபேஷன் சென்டர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான மையங்கள் அமைத்து பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம் இளைஞர்கள் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கி, பிறருக்கு வேலை கொடுப்பவர்களாக உருவாக முடியும். வித்தியாசமான சிந்தனைகளோடு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக மாணவர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.