“பிஹாரை போல தமிழகத்தில் 100% நடக்காது!” - எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் உறுதி | நேர்காணல்
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ), கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் போட்டியிட்டது. பாஜக-வுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்ததை அடுத்து அந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறிய எஸ்டிபிஐ, தற்போது திமுக கூட்டணியில் இணையலாம் எனத் தெரிகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, அண்மையில் நெல்லை சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினை அக்கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். இதுகுறித்து நெல்லை முபாரக்கிடம் பேசினோம்.
எஸ்ஐஆரை நீங்கள் கடுமையாக எதிர்க்க என்ன காரணம்?
எஸ்ஐஆர் நடத்தக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. தேர்தலுக்கு ஒராண்டுக்கு முன்போ அல்லது ஓராண்டுக்குப் பின்போ எஸ்ஐஆர் நடத்தக்கூடாது என்பது விதி. தேர்தலுக்கு முன்பு இவ்வளவு அவசர அவசரமாக ஆறரை கோடி வாக்காளர்களை சரிபார்ப்பது என்பது கடினமான பணி. எஸ்ஐஆர் மூலம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது முறையாக நடக்கவில்லை. தெளிவான விளக்கத்தையும் ஆணையம் வழங்கவில்லை. ஆகவே, நடத்தப்பட்ட எஸ்ஐஆர் முடிவை சுயாதீன குழு அமைத்து விசாரிக்கவேண்டும்.
பிஹாரைப் போல், தமிழகத்திலும் வெற்றி பெறுவோம் என்று பாஜக-வினர் கூறுவது பற்றி..?
தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். பிஹாரில் எஸ்ஐஆர் பீதி, மதச்சார்பற்ற கட்சிகள் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படாதது ஆகியவை எதிர்க்கட்சிகளின் தோல்விக்குக் காரணம். தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் களத்தில் இருக்கின்றன. யாரை அனுமதித்தாலும் பாஜக-வை அனுமதிக்க மாட்டோம் என அக்கட்சிகள் உறுதியாக இருப்பதால் பிஹாரைப் போல் தமிழகத்தில் பாஜக-வின் வெற்றி 100 சதவீதம் நடக்காது.
விலைவாசி உயர்வும், சொத்துவரி, மின்கட்டணம் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டிருப்பதும் திமுக-வின் வெற்றியை பாதிக்குமா?
விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்டவை மக்களை கடுமையாக பாதிக்கும். இதில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். அதேசமயம் பேரிடர்கால நிவாரண நிதி, கல்வி நிதி போன்றவற்றை மத்திய அரசு தராததால், தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினீர்களே..?
விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதைக் காட்டிலும் மனித உயிர்கள் மதிப்பு மிக்கது. ஆண்டு தோறும் தெரு நாய் கடித்து 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர் என்பது மிகக்கொடூரமானது. தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும் மத்திய அரசும் சுணக்கம் காட்டுகிறது.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?
அது தீபம் ஏற்றும் விஷயம் மட்டுமல்ல. தர்காவுக்கு அருகே தீபம் ஏற்றுவது, அங்கே இருப்பது எல்லைக் கல்லா, அவர்கள் சொல்லும் கருத்தா என்றெல்லாம் பல சிக்கல்கள் இருக்கின்றன. மொத்த மலையும் எங்களுடையது என பாஜக, சங்க பரிவார் சொல்லும் போது, முஸ்லிம்களுக்கு எது உரிமையோ, நூற்றாண்டு காலமாக எது நடைமுறையோ அது அப்படியே நடைபெற வேண்டும். மதுரையில் இருக்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆகவே இது ஏதோ அரசியல் காரணத்துக்காக தொடங்கப்பட்ட பிரச்சினையாகவே தெரிகிறது.
புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய், “நான் தான் முதல்வர்” என்கிறாரே... சாத்தியமா?
எல்லா கட்சிகளின் இலக்கும் அதிகாரத்தை பிடிப்பதே. அவர் மாஸ் தலைவர் என்பதால் ஆட்சியைப் பிடிப்பேன் என்கிறார். ஆனாலும், அதை தீர்மானிப்பது மக்களே.
எங்களுக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி என்று விஜய் சொல்வதை எப்படி புரிந்து கொள்வது?
தனது கட்சி தொண்டர்களை உற்சாப்படுத்தும் விதத்திலும் திமுக ஆளும் கட்சி என்பதாலும் அவர் அப்படிச் சொல்லலாம். அதேசமயம், தீய சக்தி என்று சொல்வதெல்லாம் அரசியலுக்குப் பொருத்த மானதாக இருக்காது. எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கே தீய சக்தி பாஜக மட்டுமே.
"திமுக-வுக்கு இது இறுதி ஆண்டு... இனி ஆட்சிக்கு வராது" என்று பழனிசாமி கூறியிருப்பது பற்றி..?
யாரையும் யாரும் இதுதான் இறுதி என்று சொல்லமுடியாது. அதை தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து..?
இதுவும் ஒருவகையில் லஞ்சம் தான். பெருநிறுவனங்களிடம் இருந்து பாஜக சுமார் ரூ.3,500 கோடி நன்கொடைகளை பெற்றுள்ளது. இதை எல்லாம் ஆராய்ந்தால், அந்த நிறுவனங்களுக்கு சில ஒப்பந்தங்களை வழங்க அல்லது அவர்கள் எடுக்க விரும்பிய முடிவுகளை அரசு எடுத்திருக்கிறது என்ற பின்னணி தெரிகிறது.
திமுக-வும் அதிமுக-வும் அரசியல் பங்காளிகள் என்று தவெக நிர்மல்குமார் கூறியது பற்றி?
இது அவரின் பக்குவமில்லாத கருத்து. இந்த இரு கட்சிகளே தமிழகத்தில் 60 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளன. தமிழகத்தின் உரிமைகளுக்காகவே இரு கட்சிகளும் ஆட்சி செய்துள்ளன.
வரும் 2026 தேர்தலில் எஸ்டிபிஐ எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது என முடிவாகிவிட்டதா?
எஸ்டிபிஐ-யின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் கூடும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். நாங்கள் கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தமுறை சட்டப் பேரவையில் எங்கள் கணக்கை தொடங்க வேண்டும் என்று நோக்கில் செயல்படுகிறோம்.
திமுக அல்லது தவெக-வுடன் கூட்டணி வைக்கலாம் என தகவல் வருகிறதே..?
தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
