“என்றைக்காவது ஒரு நாள் காமராஜர் ஆட்சி அமைப்போம்” - தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா நம்பிக்கை | நேர்காணல்

“என்றைக்காவது ஒரு நாள் காமராஜர் ஆட்சி அமைப்போம்” - தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா நம்பிக்கை | நேர்காணல்
Updated on
2 min read

டெல்லி பயணம், அறிக்கைகள் தயாரிப்பு, பெருந்தலைவர்கள் குறித்த ஆவண நூல் தயாரிப்பு, தேசிய அரசியலை உற்றுநோக்கல், தேசிய முரசு பருவ இதழ் பணிகள் என ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஆ.கோபண்ணா. அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.

Q

தேர்தலுக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறதே பாஜக..?

A

அகில இந்திய காங்கிரஸ் கூட கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை நியமித்திருக்கிறது. இக்குழு முதல்கட்டமாக திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ஆனால் பாஜக, அதிமுக-வை தவிர வேறு யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

Q

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்க என்ன காரணம்?

A

மகாத்மா காந்தியின் கருத்தியலை ஏற்காத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக இந்த படுபாதகச் செயலை செய்திருக்கிறது. அன்று கோட்சே மகாத்மா காந்தியை கொன்றார். இன்று காந்தியின் பெயரை நீக்கி மீண்டுமொருமுறை அவரைப் படுகொலை செய்திருக்கிறது பாஜக. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதமாக இருந்த 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்த பாஜக-வை ஏழை, எளிய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

Q

தேர்தல் நெருக்கத்தில் திமுக முக்கிய தலைவர்களுக்கு ஈடி, ஐடி போன்ற மத்திய முகமைகளை வைத்து பாஜக நெருக்கடி கொடுக்க இருப்பதாக தகவல் வருகிறதே... இது, திமுக கூட்டணியின் வெற்றியைப் பாதிக்காதா?

A

ஈடி, ஐடி, சிபிஐ ஆகியவற்றின் மூலம் எத்தனை அடக்குமுறைகளை பாஜக ஏவிவிட்டாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு முறியடிக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராக இருக்கிறது.

Q

பிஹாரில், பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் தந்ததால் தான் ஆளும் ஆர்ஜேடி - பாஜக கூட்டணி வெற்றி பெற்றதா?

A

பிஹாரில் பாஜக தேர்தல் ஆணையத்துடன் ரகசிய கூட்டணி அமைத்து வாக்குத் திருட்டின் மூலம் தான் வெற்றி பெற்றது. வளர்ச்சியோ, முன்னேற்றமோ இல்லாத பிஹாரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளிப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை.

Q

பாஜக-வை 2026 மற்றும் 2029 தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணியால் வீழ்த்தமுடியுமா?

A

2024-25-ம் ஆண்டில் மட்டும் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் 85 சதவீதம் பாஜக பெற்றிருக்கிறது. பாஜக அரசால் பயனடைந்த கார்ப்பரேட்கள் அறக்கட்டளைகள் மூலம் நன்கொடைகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் மக்களவையில் 303 ஆக இருந்த பாஜக-வின் பலம் இப்போது 240 ஆக குறைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை அதிகரித்திருந்தால் 2024-ல் நிச்சயம் மோடி ஆட்சியை அகற்றியிருக்க முடியும்.

Q

பிரதமர் மோடி தமிழை புகழ்ந்து பேசி வருகிறாரே?

A

2014 முதல் 2025 வரை மத்திய பாஜக அரசு, 85 ஆயிரம் மக்கள் மட்டுமே பேசும் சம்ஸ்கிருத மொழிக்கு ரூ.2,500 கோடியை ஒதுக்கி இருக்கிறது. ஆனால், செம்மொழி தகுதி பெற்ற தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு மொத்தமாக வழங்கியது ரூ.147.56 கோடி. இப்படி பாரபட்சம் காட்டிவிட்டு, தமிழையும், பாரதியார் கவிதைகளையும் கூறி தமிழக மக்களை ஏமாற்றலாம் என நினைத்தால் அது பகல் கனவாகத்தான் முடியும்.

Q

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க நினைக்கும் பாஜக-வும், இருமொழி கொள்கையை ஆதரிப்பதாகச் சொல்லும் அதிமுக-வும் கூட்டணி அமைத்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

A

பாஜக - அதிமுக கூட்டணி என்பதே ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அதற்கென்று பொதுவான கொள்கையோ, நோக்கமோ இல்லை. எங்கள் கூட்டணியானது 2004-ல் முடிவானது. இடையில் 2014 ஒரு தேர்தலை தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நாங்கள் ஒரே கூட்டணியாக தேர்தலைச் சந்தித்து வருகிறோம். 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் ஆகிய அனைத்திலும் வெற்றி பெற்றதைப் போல் 2026-க்கும் வெற்றியை நோக்கி பீடுநடை போட்டு வருகிறோம்.

Q

திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துவிட்டு விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்தியை அனுப்பியது ஏன்... தவெக-வுடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா?

A

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுக- காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் ஊடகத்தினரின் பார்வையும் படாமல் ரகசியமாக கூட்டணி பேச வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. காங்கிரஸின் அதிகாரபூர்வ குழு திமுக தலைமையுடன் பேசியிருக்கிறது. மற்றபடி கூட்டணி பற்றி பேசுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.

Q

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு இனியும் சாத்தியம் இருக்கிறதா?

A

எங்களின் கனவு காமராஜர் ஆட்சி. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி அமைப்பதே எங்களது நோக்கம். தேசிய நலனில் கொண்டிருக்கிற முன்னுரிமையின் காரணமாகவே எங்களால் மாநிலத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பதற்கான அடித்தளத்தை அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் என்றைக்கு தனது தலைமையில் கூட்டணி அமைக்கக்கூடிய வலிமையைப் பெறுகிறதோ அப்போது தான் காமராஜர் ஆட்சி அமைப்பதற்கான இலக்கை அடைய முடியும்.

Q

5 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகும் திமுக அரசின் நிறை, குறைகளைச் சொல்ல முடியுமா?

A

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறார். சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தை தலைநிமிர வைக்கிற ஆட்சி நடைபெறுவதை முடக்கும் வகையில் பல்வேறு நெருக்கடிகளை பாஜக கொடுத்து வருகிறது. மற்றபடி, திமுக அரசிடம் குறிப்பிட்டுச் சொல்லும்படியான குறை ஒன்றும் இல்லை.

“என்றைக்காவது ஒரு நாள் காமராஜர் ஆட்சி அமைப்போம்” - தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா நம்பிக்கை | நேர்காணல்
“தமிழகத்துக்கும் ‘பிஹார் மாடல்’ திட்டங்கள் தயார்!” - ஆர்வத்தைத் தூண்டும் ஆசீர்வாதம் ஆச்சாரி | நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in