

திருநெல்வேலி: நெல்லையை உலுக்கிய கவின் கொலை வழக்கில் 9 மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும், சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (24) மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்துவந்த நிலையில் காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவர் காதலித்த பெண்ணின் வீட்டார் தரப்பில் பட்டப்பகலில் இந்தக் கொலை நடந்தது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
குறிப்பாக கொலையான கவின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே சாதிய நோக்கத்தோடு இந்தக் கொலை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. முதலில் பாளையங்கோட்டை போலீஸார் கொலையை விசாரித்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து போலீஸார் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தை முதலில் கைது செய்தனர்.
பெண்ணின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள். இந்தநிலையில், விசாரணையில் பெற்றோர்களும் இந்த கொலையில் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. எனவே முதல்கட்டமாக தந்தை சரவணனை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் உறவினர் ஜெயபால் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
தாயும் கைது..
இந்த கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில் வழக்கில் புதிய திருப்பமாக தற்போது சுர்ஜித்தின் தாயாரும், சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த சிபிசிஐடி அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களின் அடிப்படையில் கிருஷ்ணகுமாரியை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட அவரை போலீஸார் நெல்லை 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவம் நெல்லை பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.